

மதுரை கே.கே.நகர் ரவுண்டானா பகுதியில் கடந்த 3 மாதங்களாக ரகசியமாக அமைக்கப்பட்டுவந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை திறப்பு விழாவுக்கு தயாார் நிலையில் உள்ளது.
சிலையைத் திறக்க அரசு அனுமதிக்கு அதிமுகவினர் காத்திருக்கும்நிலையில் திமுக தனது எதிர்ப்பை இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. ஜெயலலிதா சிலை திறக்க ஆட்சேபனை தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் திமுக இன்று மனு கொடுத்துள்ளது.
அந்த மனுவில், "மதுரை மாநகர் கே.கே.நகர் மாவட்ட நீதிமன்றம், பெரியார் நுழைவுவாயில் அருகில் ஜெயலலிதாவின் சிலை ஆளும் கட்சியினரால் நிறுவப்பட உள்ளதாகத் தெரிகிறது.
அந்த இடத்தில் ஏற்கெனவே எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்தப் பகுதி பரபரப்பான போக்குவரத்து உள்ள இடம். எனவே அங்கு ஜெயலலிதாவின் சிலையை அமைத்தால் அவரின் பிறந்தநாள், நினைவு நாள் நிகழ்ச்சிகளை அதிமுகவினர் அங்கு நடத்துவர்.
இதனால், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும். இந்த சிலை அமைந்தால் வாகன விபத்து அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், இந்தியா முழுவதும் பொது இடங்களில் சிலை அமைப்பதற்கு தடைவிதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 2013 ஜனவரியிலேயே உத்தரவிட்டது.
எனவே மேற்படி இடத்தில் அனுமதியின்றி ஜெயலலிதாவின் சிலையினை நிறுவுவதை அனுமதிக்கக்கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் திமுக பொறுப்புக்குழு தலைவர் கோ.தளபதி, திமுக புறநகர் மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி எம்.எல்.ஏ., எம்.மணிமாறம், முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. வி.வேலுச்சாமி, எம்.எல்.ஏ., ப.சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர், மதுரை காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் மதுரை மாநகராட்சி துணை ஆணையர் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
மனு மீது நடவடிக்கை எடுத்து சிலை திறப்பை தடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.