

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூருக்கு நேற்று காலையில் ஒரு மாநகர பஸ் (தடம் எண்-159ஏ) சென்றது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஏராளமான பயணிகளும் பஸ்ஸில் இருந்தனர். காலை 9.30 மணியளவில் தண்டையார்பேட்டை அப்போலோ நிறுத்தம் அருகே பஸ் வந்தது. அங்கு வேறு கல்லூரி மாணவர்கள் சிலர் நின்றனர். அவர்களைப் பார்த்ததும் பஸ்ஸில் இருந்த கல்லூரி மாணவர்கள் கூச்சல் போட்டு கிண்டல் செய்ததால் மோதல் ஏற்பட்டது.
அப்போது சில கல்லூரி மாணவர்கள் பஸ் மீது கற்களை எறிந்தனர். இதில் பஸ்ஸின் பின் பக்க கண்ணாடியும் சில ஜன்னல் கண்ணாடிகளும் முற்றிலுமாக உடைந்து விழுந்தன. திடீரென நடந்த இந்த தாக்குதலால் பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். அதன் பின்னரும் இரு கல்லூரி மாணவர்களும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இதனால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது.
இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் போலீஸாருக்கு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸை பார்த்ததும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பஸ்ஸின் நடத்துநர் சங்கர்(36) புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.