

அடுத்த 2 தினங்களுக்கு 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (டிச.4) சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக, நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்"
என புவியரசன் தெரிவித்தார்.