

விருதுநகர் மாவட்டத்தில் பரலாக பெய்துவரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் வேளாண் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 22 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உணவு தானிய உற்பத்தி மேற்கொள்ளப்படும். நடப்பு பருவத்தில் வடகிழக்கு பருவமழை கைகொடுத்து வருவதால் மாவட்டத்தில் பரவலான மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன.
அதோடு, மேற்குத் தொடர்ச்சிமலை பகுதியிலும் நல்ல மழை பெய்ததால் காட்டாறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார்கோயில் ஆறு, சாஸ்தா கோயில் ஆறு, பிளவக்கல் அணை, செண்பகத் தோப்பில் உள்ள காட்டாறு உள்ளிட்ட ஆறுகளில் நீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. மேலும், அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலான மழை பெய்தது. நேற்று காலை நிரவரப்படி அருப்புக்கோட்டையில் 12 மி.மீ, ஸ்ரீவில்லிபுத்தூரில் 13 மி.மீ, சிவகாசியில் 5 மி.மீ, விருதுநகரில் 5.40 மி.மீ, திருச்சுழியில் 15.30 மி.மீ, ராஜபாளையத்தில் 12 மி.மீ, காரியாபட்டியில் 8 மி.மீ, பிளவக்கலில் 16.40 மி.மீ, வத்திராயிருப்பில் 16 மி.மீ, வெம்பக்கோட்டையில் 13 மி.மீட்டரும் அதிகபட்சமாக சாத்தூரில் 26 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
இதனால், அணைகளின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்துள்ளது. பிளவக்கல் பெரியாறு அணையில் 11.77 மீட்டரும், கோவிலாறில் 10.15 மீட்டரும், வெம்பக்கோட்டையில் 2.93 மீட்டரும், ஆணைக்குட்டத்தில் 3.42 மீட்டரும், குல்லூர்சந்தை நீர்த்தேக்க அணையில் 1.35 மீட்டரும், சாஸ்தா கோயில் அணையில் முழு கொள்ளளவான 10 மீட்டர் அளவுக்கும் நீர் நிறைந்து காணப்படுகிறது.
அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வயல்வெளிகள் பசுமை போர்த்தியது போல் காணப்படுகிறது.