

கோவையில் ஆதி திராவிடர் காலனியை ஒட்டி கட்டப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியான சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
தொடர் கனமழை காரணமாக கோவை மேட்டுப்பாளையம், நடூர் ஆதி திராவிடர் காலனியில் கட்டப்பட்டிருந்த 20 அடி உயர கருங்கல் சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் இருந்த வீடுகளில் விழுந்தது.
இதில் தூக்கத்தில் இருந்த ஆண், பெண், குழந்தைகள் உட்பட 17 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
17 பேரை பலி கொண்ட தடுப்புச் சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குற்றவாளியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூ.10 லட்சம் இழப்பீடாக சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும், வீடுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும், இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ள தகுதியான நபர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.