வேலை கிடைக்காததால் இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் சேரும் அவலம்: திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்: கோப்புப்படம்
திருநாவுக்கரசர்: கோப்புப்படம்
Updated on
1 min read

வேலை கிடைக்காததால் இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் சேரும் அவல நிலை ஏற்படுகிறது என, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று (டிச.3) பூஜ்ஜிய நேரத்தில் திருநாவுக்கரசர் பேசியதாவது :

"இந்திய அளவில் சுமார் 30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் உள்ளனர். மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக கூறியதை நிறைவேற்றவில்லை.

வங்கிகளில் கல்விக் கடன் வாங்கியும், பெற்றோர்கள் நகைகளை, நிலத்தை அடமானம் வைத்தும் உடமைகளை விற்றும், பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். கடனை கட்ட முடியவில்லை, வேலையும் கிடைக்கவில்லை. சில இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சிலர் தீவிரவாத அமைப்புகளில் சேரும் அவல நிலை ஏற்படுகிறது.

எனவே வேலை கிடைக்கும் வரை மேல்நிலைப் பள்ளி இறுதி வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்துள்ள இளைஞர்களுக்கு தினம் ரூபாய் 100 வீதம் மாதம் ஒன்றுக்கு ரூ.3000, பட்டம், பட்ட மேற்படிப்பு, இதர படிப்பு படித்த இளைஞர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.5000 வீதமும் வேலை கிடைக்கும் வரை வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் சரிபாதியாக இச்செலவை ஏற்றுக் கொள்ளலாம்.

இளைஞர்களை காக்க உதவ மாதந்தோறும் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கான மாத உதவித் தொகை திட்டத்தை அறிவித்து வழங்க வேண்டும்"

இவ்வாறு திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in