

தமிழகத்தில் புதிதாக அமைய வுள்ள 6 அரசு மருத்துவக் கல்லூரி களுக்கு முதல்கட்டமாக ரூ.137.16 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களான விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக் கல், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க முதல்கட்டமாக மத்திய அரசு அனுமதி அளித்தது. இரண்டாம் கட்டமாக கிருஷ்ணகிரி, நாகப்பட் டினம், திருவள்ளூர் மாவட்டங் களிலும் மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது.
இந்த 9 புதிய அரசு மருத் துவக் கல்லூரிகளும் தலா ரூ.325 கோடி மதிப்பீட்டில் அமைய வுள்ளன. இதில், மத்திய அரசு தனது பங்கு நிதியாக தலா ரூ.195 கோடி வழங்குகிறது. தமிழக அரசு தலா ரூ.130 கோடியை ஏற் கிறது. ஒவ்வொரு கல்லூரியும் 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் அமைவதால், அதற்கான கட்ட மைப்புகளை உருவாக்க தேவை யான கூடுதல் செலவினங்களை ஏற்றுக் கொள்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக அனுமதி வழங்கப்பட்ட 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு தனது பங்கில் இருந்து தலா ரூ.100 கோடி வீதம் மொத்தம் ரூ.600 கோடி மற்றும் நிலத்தை கடந்த 12-ம் தேதி ஒதுக்கியது.
புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து முதலில் அனுமதி அளிக்கப்பட்ட 6 மருத்துவக் கல் லூரிகளுக்கான கட்டுமானப் பணி களுக்கு ரூ.137.16 கோடியை விடு விக்குமாறு முதன்மை கணக்கு அதி காரிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.