சமூக பாதுகாப்பு திட்டங்களை அறிய கட்டணமில்லா தொலைபேசி வசதி

சமூக பாதுகாப்பு திட்டங்களை அறிய கட்டணமில்லா தொலைபேசி வசதி
Updated on
1 min read

சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக முதல் முறையாக கட்டணமில்லா தொலைபேசி வசதி (1800-425-1090) அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தெரிவித்துள்ளார்.

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த ஓய்வூதியம் பெறுவதற்கான நிபந்தனைகள், ஆதரவற்றோர் என்பதற்கான வரையறைகள் ஏப்ரல் 2015-ல் தளர்த்தப்பட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இதனால், தமிழகம் முழுவதும் முதியோர், விதவைகள், ஆதரவற்ற மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நிலமற்ற விவசாய தொழி லாளர்கள் கூடுதல் எண்ணிக்கையில் பயன்பெறுகின்றனர்.

கடந்த 2011-ல், ரூ.500 ஆக இருந்த ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டது. இதன் அடிப்படையில் 22 லட்சமாக இருந்த பயனாளிகள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 31 லட்சமாக உயர்ந்துள்ளது. நிதி ஒதுக்கீடு ரூ.1,200 கோடியில் இருந்து தற்போது ரூ.4,198 கோடியாக உயர்ந்துள்ளது.

இத்திட்டத்தை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் கேட்டு தெரிந்துகொள்ள வசதியாக முதல் முறையாக 1800-425-1090 என்ற கட்டணமில்லா தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத் தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விவரங்கள் கணினிமயமாக்கப்பட்டதால், இணையதளம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதனால், 31 லட்சம் பயனாளி களின் இருப்பிடத்துக்கே சென்று ஓய்வூதியம் வழங்கப் படுவது உறுதிசெய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், வருவாய்த்துறை செயலர் இரா.வெங்கடேசன், நில நிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதன், சமூக பாதுகாப்பு திட்டங்கள் ஆணையர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in