

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று அதிகாலை ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் இருந்த ஓட்டு வீடுகள் மீது விழுந்ததில், உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையம் சென்ற முதல்வர் பழனிசாமி இறந்த 17 பேரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பேசியதாவது:
"மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து இறந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட ரூ.4 லட்சம் இழப்பீட்டுடன் கூடுதலாக ரூ.6 லட்சம் சேர்த்து தலா ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும். நடூரில் உள்ள ஓட்டு வீடுகளில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்றுவாரியம் மூலம் வீடு கட்டித் தரப்படும்.
தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என அரசு உறுதி பூண்டுள்ளது. குடிசை இல்லாத மாநிலமாக்க ஒவ்வொரு ஆண்டும் இலக்கு வைத்து கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். விபத்துக்குக் காரணமான மதில் சுவர் கட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.