பக்தையின் கன்னத்தில் அறைந்த தீட்சிதர்: நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம் 

பக்தையின் கன்னத்தில் அறைந்த தீட்சிதர்: நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம் 
Updated on
1 min read

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தையை அறைந்த தீட்சிதர், போலீஸ் கைதுக்குப் பயந்து தலைமறைவானார். உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்ததின் அடிப்படையில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி இரவு முக்குறுணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்யக் கோரிய பெண்ணை, தீட்சிதர் தாக்கிய காணொலிக் காட்சி இணையதளங்களில் வைரலாகப் பரவியது. இது தொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து தீட்சிதர் தலைமறைவானார்.

இந்த வழக்கில் தன்னைக் காவல் துறையினfர் கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி தீட்சிதர் தர்ஷன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவில் கோயில் நடை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டும் என அந்தப் பெண் தகராறு செய்ததாகவும், ஒரு கட்டத்தில் தன்னை நோக்கி கையைத் தூக்கியதால், தான் தற்காப்புக்காக தள்ளி விட்டதாகவும், தனக்கெதிராக போலீஸார் பொய் வழக்குப் போட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தபோது, புகார் அளித்த பெண்மணி தரப்பில் முன் ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை முன் ஜாமீன் வழங்கப்பட்டால் சிதம்பரத்தில் தங்கியிருக்க அனுமதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, தீட்சிதர் தர்ஷன் 15 நாட்கள் ராமேஸ்வரத்தில் தங்கியிருக்க வேண்டும். ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும். ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் செயல் அலுவலர் முன் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in