Published : 03 Dec 2019 05:52 PM
Last Updated : 03 Dec 2019 05:52 PM

பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா வழக்கு: சமரசத் தீர்வு மையத்துக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு

இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கு இடையிலான பிரச்சினை குறித்து இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரசத் தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 42 வருடங்களாக சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் அமைந்திருக்கும் இடத்தை தனது ஒலிப்பதிவுக் கூடமாகப் பயன்படுத்தி வந்தார். அவருக்கு ஸ்டுடியோ நிறுவனர் பிரசாத் பயன்படுத்த அனுமதி அளித்திருந்தார். பிரசாத் மறைவுக்குப் பின் நிர்வாகம் அவரது மகன் கைக்கு வந்தது.

அண்மையில் பிரசாத் ஸ்டுடியோஸ் இயக்குனர் சாய் பிரசாத்துக்கும், இளையராஜாவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இளையராஜா பயன்படுத்தி வந்த கட்டிடம் மூடப்பட்டது. இளையராஜாவுக்கு ஆதரவாக பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திடம் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்டோர் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இட உரிமை தொடர்பாக போதுமான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதால் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம், தான் பயன்படுத்தி வந்த கட்டிடத்தை இடிக்கத் தடை கோரியும், வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை தான் அந்த இடத்தை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கக் கோரியும் இளையராஜா உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்..

உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால், வழக்கை விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரி இளையராஜா மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை சமரசத் தீர்வு மையத்திற்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x