Published : 03 Dec 2019 05:27 PM
Last Updated : 03 Dec 2019 05:27 PM

ஜல்லிக்கட்டுப் போட்டியில் கார், பைக்குகளுக்குப் பதில் பரிசாக நாட்டுப் பசுமாடுகள்: விழா கமிட்டியினருக்கு ‘பேஸ்புக்’கில்  இளைஞர்கள் கோரிக்கை

மதுரை 

அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டுமாட்டினங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இறுதியாக வெற்றிப்பெறும் சிறந்த வீரர்கள், காளைகளுக்கு கார், பைக், டிவிகளுக்கு பதிலாக நாட்டு பசுமாடுகளை வழங்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் போட்டி அமைப்பாளர்களுக்கு கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு பராம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டபோது தமிழகமே ஒட்டுமொத்தமாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலங்காநல்லூர் ஆரம்பித்து கன்னியாகுமரி முதல் சென்னை மெரினா பீச் வரை நடந்த இந்த போராட்டத்தை நாடே திரும்பிப்பார்த்தது. சட்டமன்றத்தில் தனி சட்டம் இயற்றப்பட்டு மீண்டும் ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு அனுமதி கிடைத்தது.

தற்போது வரை எந்தத் தடையும் இல்லாமல் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடக்கிறது. பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டநிலையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன.

காளைகளை அதன் உரிமையாளர்கள் தயார் செய்து வருகின்றனர். மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க பயிற்சி பெற தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், அந்த போராட்ட நேரத்தில் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்க வேண்டும், அதன்மூலம் நாட்டுமாடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்நிறுத்தினர்.

இந்த கோரிக்கையை நிரந்தரமாக பாதுகாக்க, ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கார், பைக், டிவி, பீரோ வழங்குவதற்கு பதில் வெற்றிப்பெறும் சிறந்த காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு நாட்டுமாடுகளை பரிசாக வழங்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டுப்போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள், மாணவர்கள் போட்டி அமைப்பாளர்களுக்கு ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’ போன்ற சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து இந்த கருத்தை ‘பேஸ்புக்’கில் பதிவிட்ட ஜல்லிக்கட்டுப்போராட்டத்தில் பங்கேற்ற அலங்காநல்லூரை சேர்ந்த பொன்.குமார் கூறியதாவது:

ஜல்லிக்கட்டுப்போராட்டம், வெற்றிக்கு பின்னால் நாட்டுமாடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் உயர்ந்த நோக்கமும், விருப்பமும் இருந்தது. அதை போராட்டத்தில் கண்கூடாக நாங்கள் பார்த்தோம்.

அதனாலே, 2017ம் ஆண்டு போராட்டத்திற்கு பிறகு நடந்த முதல் ஜல்லிக்கட்டில் போட்டியின் முடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த காளைக்கும், சிறந்த வீரருரக்கும் நான் ஏ-2 பால் தரக்கூடிய இரண்டு நாட்டுப் பசு மாடுகளை பரிசாக வழங்கினேன்.

ஆனால், போட்டி அமைப்பாளர்கள் போட்டியை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டியில் வெற்றிப்பெறுகிறவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்து பார்வையாளர்களையும், போட்டியில் பங்கேற்பார்களையும் கவர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது.

அதற்காக, இந்த போட்டிகளை வணிக நிறுனங்களும், அரசியல் கட்சியினரும் தங்களுக்கான ஒரு களமாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதனால், நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தை பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை போட்டி அமைப்பகள் நடத்த வேண்டும்.

அதனால், வரும் 2020ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் நாட்டு பசு மாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் இறுதியில் வெற்றிப்பெறும் சிறந்த காளைகளுக்கும், வீரர்களுக்கும் நாட்டு பசுமாடுகளை பரிசாக வழங்க வேண்டும்.

இந்த முயற்சி கைகூடினால், தமிழகம் முழுவதும் நடக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் பசுமாடுகளை பரிசாக வழங்க அந்தந்த போட்டி அமைப்புகள் முன் வருவார்கள்.

அது வரை நாங்கள், போட்டி அமைப்பாளர்கள் கவனத்தை ஈர்க்க இந்த கருத்தை ‘பேஸ்புக்‘, ‘வாட்ஸ் அப்’, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கில் பரப்புவோம், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x