

மதுரை கே.கே.நகர் ரவுண்டானாவில் கடந்த 3 மாதமாக ரகசியமாக அமைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை திறப்பு விழாவுக்கு தயாார் நிலையில் உள்ளது. சிலையைத் திறக்க அரசு அனுமதிக்கு அதிமுக காத்திருக்கும்நிலையில் இதுவரை இந்த சிலை அமைக்க எதிர்கட்சிகள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை.
தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், மற்ற சமூக அமைப்பு தலைவர்கள் சிலைகளை அனுமதியில்லாமல் புதிதாக பொது இடங்களில் நிறுவக்கூடாது என்று உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது.
அதனால், தற்போது பொதுஇடங்களில் தலைவர்கள் சிலைகள் வைப்பதற்கு அரசு அனுமதி வழங்குவம் இல்லை. அதனாலே, இதுவரை பொதுஇடங்களில் கருணாநிதி சிலை வைக்க திமுகவினர் ஆர்வம்காட்டவில்லை. ஆனால், மதுரை கே.கே.நகர் ரவுண்டானாவில் ஏற்கெனவே உள்ள எம்ஜிஆர் சிலை இருந்த இடத்திலே ரகசியமாக தற்போது ஜெயலலிதா சிலையும் அதிமுகவினர் அமைத்துவிட்டனர்.
இந்தப் பகுதியில் எம்ஜிஆர் சிலை மட்டுமே இதுவரை இருந்தது. மாட்டுத்தாவணி பஸ்நிலையம், மேலூர் சாலை, கே.கே.நகர் பிரதான சாலை, மாவட்ட நீதிமன்றம் சாலை போன்றவை இந்த ரவுண்டா வழியாக செல்வதால் சாதாரண நாட்களிலே போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வரும்போதெல்லாம் இப்பகுதியில் ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பிக்கும். அதனால், புதிதாக இந்த இடத்தில் சிலை அமைக்க நீதிமன்றமே அனுமதிக்காது. அதனால், கடந்த 3 மாதத்திற்கு முன் மதுரை மாநகர அதிமுகவினர் ரவுண்டா முழுவதையும் இரும்புத் தடுப்புகளை வைத்து மறைத்து, எம்ஜிஆர் சிலையை பராமரிப்பதாகக் கூறி அங்கு புதிதாக ஜெயலலிதா சிலை அமைக்கும் பணியைத் தொடங்கினர்.
இதற்கு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை நிர்வாகம் உள்ளிட்ட எந்த அரசுத் துறை நிர்வாகங்கள் அனுமதியும் பெறவில்லை எனக்கூறப்படுகிறது. அதைப் பற்றி ஆரம்பத்தில் கேட்டபோது ஏற்கெனவே இருந்த எம்ஜிஆர் சிலை மட்டும் புனரமைக்கப்படுவதாகவும், ஜெயலலிதா சிலை அமைக்கப்படவில்லை என்றும் கூறினர்.
அதன்பிறகு அங்கு ஜெயலலிதா சிலைதான் அமைக்கப்படுவது தெரியவந்ததும், அதிமுகவினர் வாய்திறப்பதில்லை. சிலை அமைக்கும் பணியால் எதிர் எதிரே வாகனங்கள் மோதி அடிக்கடி வாகன விபத்துகளும், போக்குவரத்து ஸ்தம்பிப்பும் தற்போது வரை தொடர்கிறது.
திமுக உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகளே இந்த சிலை அமைப்பு விஷயத்தை கண்டுகொள்ளாமல் மறைமுகமாக அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்பட்டது. ஆளும்கட்சி அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இச்சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதால் அரசுத் துறை அதிகாரிகள் அவரிடம் எதுவும் கேட்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது கே.கே.நகர் ரவுண்டானா பகுதியில் புதிதாக எம்ஜிஆர் சிலையும், ஜெயலலிதா சிலையும் அமைத்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளன.
இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘‘டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா நினைவு தினம் வருகிறது. அன்றைய தினத்தில் இந்த சிலைகளை திறக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அன்றே அனுமதி கிடைத்தால் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்து அதிமுகவினர் மாலை அணிவிப்பார்கள். தாமதமானால் முதலமைச்சர் கே.பழனிசாமியை அழைத்து வந்துகூட திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்படும், ’’ என்றனர்.