

வெங்காய விலை அதிகரித்து வருவதற்கு எதிராக ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நூதனப் போராட்டம் நடைபெற்றது.
வெங்காய விளைச்சல் குறைவு காரணமாக இந்தியா முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.150-ஐயும் தாண்டி சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் வெங்காய விலை ஏற்றத்தைக் கண்டித்து ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்தியன் வங்கிக் கிளை எதிரே தங்கத்துக்கு பதிலாக "வெங்காயத்தை" அடமானம் வைக்கும் போராட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் சே.முருகானந்தம் தலைமை வகித்தார், மாவட்ட நிர்வாக கவுன்சில் உறுப்பினர் சி.ஆர்.செந்தில்வேல் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து சே. முருகானந்தம், "வெங்காய விலை தங்கம் போல் ஏறியுள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் வெங்காயத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கால் கிலோ வெங்காயம் வாங்கவே பெரும்பாடாக உள்ளது. வெங்காயம் மட்டுமின்றி பல்வேறு காய்கறிகளின் விலை உயர்வு சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதனால் வெங்காயம் வாங்க வங்கிக் கடன் வழங்கவும், வெங்காயத்தை தங்கத்திற்கு பதிலாக அடகு வைத்து கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றோம்" என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் வடகொரியா, செந்தில், தாலுகா குழு உறுப்பினர்கள் மோகன்தாஸ், ஜீவானந்தம், பிச்சை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எஸ். முஹம்மது ராஃபி