மீனவர்களின் வலையில் சிக்கிய செயற்கைக்கோள் உதிரி பாகம்; எடுத்துச் சென்ற இஸ்ரோ குழு

மீனவர்கள் வலையில் சிக்கிய செயற்கைக்கோள் உதிரி பாகம்
மீனவர்கள் வலையில் சிக்கிய செயற்கைக்கோள் உதிரி பாகம்
Updated on
1 min read

மீனவர்களின் வலையில் சிக்கிய செயற்கைக்கோள் உதிரி பாகத்தை இஸ்ரோ குழு புதுச்சேரிக்கு வந்து எடுத்துச் சென்றது.

புதுச்சேரியில் இருந்து வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று காலையில் கடலுக்குச் சென்றனர். பத்து நாட்டிக்கல் மைல் தொலைவில் செயற்கைக்கோள் உதிரி பாகம் ஒன்று அவர்களின் வலையில் சிக்கியதையடுத்து, அதனைக் கரைக்கு எடுத்து வந்தனர்.

வம்பாகீரப்பாளையம் ஹைட் ஹவுஸ் கடற்கரையில் அதைச் சேர்த்து அதிகாரிகளுக்கும், காவல் நிலையத்துக்கும் தகவல் தந்தனர். அதைத் தொடர்ந்து அது செயற்கைக்கோளை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் எரிபொருள் டேங்கர் எனக் கூறப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி அரசுத் தரப்பிலிருந்து இஸ்ரோவுக்குத் தகவல் தரப்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று (டிச.3) காலை இஸ்ரோ குழுவினர் பெரிய லாரியுடன் புதுச்சேரி வந்தனர். இஸ்ரோ குழுவினர் வம்பாகீரப்பாளையம் பகுதியில் கிடந்த சாதனத்தை ஆய்வு செய்தனர். இச்சூழலில் கடலிலிருந்து எடுத்து வந்த மீனவர்களின் வலை கிழிந்ததால் இழப்பீடு கோரி அத்தொகுதி எம்எல்ஏ அன்பழகன் தலைமையில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரோ குழுவினரிடம் கேட்டதற்கு, "செயற்கைக்கோளை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் மோட்டாரில் ஒன்று இது. கடந்த மாதம் விண்ணில் ஏவிய பிஎஸ்எல்வி ராக்கெட்டில் ஆறு எரிபொருள் உந்து சக்தி மோட்டார் இருக்கும். அவை கடலில் விழுந்து மக்கி விடும். அதில் ஒன்றை பார்த்து எடுத்து வந்துள்ளனர். இது தேவையில்லாத ஒன்று என அரசுத் தரப்பில் தகவல் தெரிவித்ததால் இங்கு எடுக்க வந்தோம்" என்றனர்.

இறுதியில் மீன்வளத்துறையினர் நேரில் வந்து மீனவர்களிடம் பேசினர். சேதமடைந்த வலை மற்றும் படகுக்கு புதுச்சேரி அரசுத் தரப்பில் இழப்பீடு தருவதாக உறுதி தரப்பட்டது. இதையடுத்து காலையில் தொடங்கிய பிரச்சினை மதியம் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து மோட்டாரை இஸ்ரோ தரப்பினர் எடுத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in