

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 1935-ல் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பண்ணையார் வளைவு லாரி மோதி இடிந்து விழுந்து சேதமடைந்தது.
ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா சாலையிலிருந்து அய்யனார்கோயில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது பண்ணையார் வளைவு.
கடந்த 1935ம் ஆண்டு சோமசுந்தரம்பிள்ளையால் கட்டப்பட்டது. ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று வெள்ளையனே வெறியேறு இயக்கம் உள்ளிட்ட போராட்டங்கள் இங்கு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதனால், இந்த வளைவு திறக்கப்படாமலேயே இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் இந்த வளைவு திறக்கப்பட்டது. சுமார் 49 அடி உயரம் உள்ள இந்த வளைவு பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்ததால், மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தின் மூலம் கடந்த ஆண்டு இந்த வளைவு புனரமைக்கப்பட்டது.
இன்று காலை, பண்ணையார் வளைவு வழியாக மில்லுக்கு பாரம் ஏற்றிச்சென்ற லாரி மோதி வளைவு இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.