Published : 03 Dec 2019 02:58 PM
Last Updated : 03 Dec 2019 02:58 PM

கொத்தவால் சாவடியில் ஆக்கிரமிப்பு கட்டிடத்துக்கு சீல் வைப்பு: இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை

கொத்தவால் சாவடியில் கோயில் நிலத்தில் வாடகை எதுவும் செலுத்தாமல் இருந்த தனியார் நிறுவனத்தின் ஆக்கிரமிப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அகற்றியதோடு, கட்டிடத்தைப் பூட்டி சீல் வைத்தது.

கொத்தவால் சாவடி காவல் எல்லைக்குட்பட்ட சௌகார்பேட்டை, தங்கச்சாலைத் தெருவில் அகர்வால் பவன் என்ற கடை உள்ளது. இந்தக் கடை ஏழுகிணறு வள்ளியப்பன் தெருவில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடமாகும்.

இந்தக் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ள இனிப்பு தயாரிப்பு நிறுவனத்திடம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால், ஆக்கிரமிப்பாளர் மீது இந்து சமய அறநிலைத்துறை சட்டப்பிரிவு 79 இன் படி மேற்படி இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராதாமணி முன்னிலையில் இன்று காலை 10:55 மணிக்கு இனிப்புக் கடை இயங்கி வந்த கட்டிடத்துக்குப் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

சீல் வைப்பதற்கு முன் அகர்வால் பவன் சார்பாக வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். நிர்வாகத் தரப்பில் ரூபாய் 65 லட்சம் பணமாக உடனே கட்டினால் மட்டுமே நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் அந்தக் கட்டிடம் சீல் வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x