

பொதுமக்களை குறிவைத்து நடக்கும் மோசடிகள் தொடர்பாக ‘ஏழாவது உலகம்’ என்ற விழிப்புணர்வு தொடர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் சமீபத்தில் வெளியானது. இதில், ‘போதையில் தள்ளாடும் மருந்துச் சீட்டுகள்’ என்ற கட்டுரை கடந்த 20-ம் தேதி வெளியானது.
இது மருந்துக்கடை நடத்துவோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள தாக சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க உறுப்பினர் விஜயகுமார் வேல்முருகன் பாராட்டி மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். சங்கத்தின் சார்பிலான கடிதத்துடன் இந்த கட்டுரையையும் இணைத்து சங்கத்தின் மருந்துவிற்பனையாளர்கள் அனைவருக்கும் அனுப்பியதை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், ‘மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்தைக் கொடுக்கக் கூடாது.
பில், மருந்து இருப்பு குறித்த தகவல்கள், புள்ளிவிவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதுசம்பந்தமாக மேலும் அவர்கள் கருத்தை அறிய, சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க ஆலோசகரும், திருவொற்றியூர் மருந்து வணிகர்கள் சங்க செயலாளருமான எஸ்.சீனி வாசனை தொடர்புகொண்டோம். அவர் கூறியதாவது:
‘‘மக்களிடமும் மருந்துக் கடையினர் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் கட்டுரை வெளியிட்ட ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு நன்றி. போதையில் சிக்கிச் சீரழியும் இளைய தலை முறையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் உங்கள் முயற்சிக்கு நாங்கள் துணை நிற்போம். இந்த கட்டுரை வெளியானதும், தமிழக அரசு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினர் இதை எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தனர். கட்டுரையில் கூறப்பட்டுள்ள விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
ஆந்திராவில்..
கடந்த மாதம்கூட சென்னை தாம்பரத்தில் இதுபோல மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்து விற்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே தலையிட்டு எச்சரிக்கை விடுத்தோம். பொது வாகவே, ஆந்திராவில் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்துகளை போதைக்காக விற்கும் போக்கு இருப்பதாக அரசல்புரசலாக தகவல் வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற புகார் எழும்போது, உடனே எங்கள் சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கிறோம்.
‘தி இந்து’ தமிழ் நாளிதழ் கட்டுரையைப் படித்தவுடன் உடனே அதை எங்கள் சங்கத்தினர் அனைவரது பார்வைக்கும் அனுப்பி, இது போன்ற விதிமீறல்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினோம். போதையின் பாதையில் இளைஞர்கள் தள்ளாடும் போக்கை நிறுத்தப் பாடுபடும் உங்களது பணி யில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர்கிறோம்.’’
இவ்வாறு அவர் கூறினார்.
நோய் தீர்க்கும் மருந்துகள் எப்படி விதிகளை மீறி போதைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் அக்கட்டுரையில் விவரிக்கப்பட்டிருந்தது. புதுவித போதைக் கலாச்சாரத்தில் இருந்து இளைஞர்களை மீட்கும் முயற்சியில் கைகோர்த்த சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் பாராட்டுகிறது.