

சரியான அளவில் சுடிதார் வழங்காமல், மாற்றியும் கொடுக்காமல் இழுத்தடித்த ஜவுளிக்கடைக்கு எதிராக சிறுமி தொடர்ந்த வழக்கில் ரூ.15000 அபராதம் மற்றும் வழக்குச் செலவு உட்பட ரூ.21,000 வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருநெல்வேலி டவுனில் உள்ள மேட்டுத்தெருவில் வசிப்பவர் நெல்லையப்பன் (50). இவரது மனைவி கோமதி (45). இவர் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளிக்காக தனது 2 மகள்களுக்கும் துணி எடுக்க அதே நெல்லை டவுன் வடக்கு ரத வீதியில் உள்ள துணிக்கடைக்குச் சென்றார். அங்கு தனது 11 வயது மகளுக்கு 1000 ரூபாயில் ஒரு சுடிதார், 7 வயது மகளுக்கு 700 ரூபாயில் ஒரு சுடிதார் வாங்கியுள்ளார்.
அங்கு உடையை போட்டுப் பார்க்கும் வசதி கொண்ட ட்ரையல் ரூம் இல்லை. உடை சரியாக இருக்கும் என்று சொன்னதால் பணத்தைக் கொடுத்து வாங்கி வந்துள்ளார். ஆனால் மூத்த மகளான 11 வயது மகளுக்கு சுடிதார் டாப் சரியாக இருந்துள்ளது. பேன்ட் சிறிதாக இருந்துள்ளது.
பிரித்து தைக்கலாம் என்றாலும் துணியில் இடமில்லை. இதனால் புதுத்துணி இல்லாமல் 11 வயது மகள் தீபாவளி கொண்டாட முடியாதே என்று வருத்தப்பட்ட கோமதி, அக்டோபர் 19-ம் தேதி அன்று ஜவுளிக்கடைக்குச் சென்று வேறு உடை மாற்றித் தரும்படி கேட்டார். மாற்றித் தர முடியாது, பணத்தையும் திருப்பித் தர முடியாது என்று கடைக்காரர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
அப்படியானால் இந்த சுடிதாரை என்ன செய்வது? என்று கேட்டபோது, முடிந்தால் பயன்படுத்து. இல்லையென்றால் மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்துள்ள அன்புச்சுவருக்கு தானமாகக் கொடு என பலர் முன்னிலையில் ஏளனமாகக் கூறி, அவமானப்படுத்தி அனுப்பியுள்ளனர். இதையடுத்து தனக்கு நேர்ந்த நிலை குறித்தும், ஜவுளிக்கடை தன்னை நடத்திய விதம் குறித்தும் ஆதாரங்களுடன் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் கோமதி வழக்குத் தொடர்ந்தார்.
தனக்கு ஏற்பட்ட அலைச்சல், குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவமானம் அனைத்திற்கும் சேர்த்து ஜவுளிக்கடையினர் 95,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோமதி முறையிட்டார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், வழக்கில் ஜவுளிக்கடையினர் நுகர்வோருக்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை. பொருளையும் மாற்றித் தரவில்லை என்பதை உறுதிப்படுத்தியதை அடுத்து நேற்று தீர்ப்பளித்தது.
வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி தேவதாஸ், உறுப்பினர் சிவமூர்த்தி, முத்துலட்சுமி ஆகியோர் ரெடிமேட் நிறுவனம் செய்தது நேர்மையற்ற வாணிபம் மற்றும் சேவை குறைபாடு ஆகும் என்பதால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.15,000 மற்றும் வழக்குச் செலவு ரூ.5000 ரூபாயும் சேர்த்து மொத்தம் ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், மனுதாரரிடம் கொடுத்த அனார்கலி சுடிதார் ரெடிமேட் நிறுவனம் திரும்பப் பெற்றுக்கொண்டு அனார்கலி சுடிதார் விலை ரூ.1000/-த்தை திரும்ப வழங்க வேண்டும். 1 மாத காலத்தில் வழங்கத் தவறினால் 6% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
நுகர்வோர்கள் தங்கள் உரிமைக்காக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களை நாடலாம். 1000 ரூபாய் சுடிதார் சரியாக இல்லை என்றால் மாற்றித் தர வேண்டியது நிறுவனத்தின் கடமை. அதை மதிக்காமல் நடந்ததால் 20,000 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர் சேவையைச் சரிவர செய்யாத நிறுவனங்கள் அதற்குரிய அபராதத்தையும் தண்டனையையும் அனுபவிக்க வேண்டும். காலம் மாறுகிறது. மக்கள் விழிப்புணர்வு அடைகிறார்கள் என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.