Published : 03 Dec 2019 11:10 AM
Last Updated : 03 Dec 2019 11:10 AM

போராட்டக்காரர்கள் மீது தடியடி: 17 பேரின் உயிரிழப்பு கூட ஆட்சியாளர்களின் கல்மனதைக் கரைக்கவில்லை; ஸ்டாலின் விமர்சனம்

17 பேரின் உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதைக் கரைக்கவில்லை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (டிச.3) வெளியிட்ட அறிக்கையில், "கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ள, எவருடைய இதயத்தையும் உலுக்கிடும், கோரச் சம்பவத்தில் உயிரிழந்திருக்கும் 17 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ளதை சம்பவம் என்றோ, விபத்து என்றோ மட்டும் சொல்லிவிட்டுக் கடந்து போய்விட முடியாது. வன்மம், அலட்சியம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு, 17 உயிர்கள் பரிதாபமான முறையில் பலியாகி உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்!

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக சாலைகளில் வெள்ளமெனத் தண்ணீர் ஓடுவதும், அது பல ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்ததும், குடியிருப்புப் பகுதிகள் தண்ணீரில் மிதப்பதும், பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டியதுமான துன்ப துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். இந்தத் துயரங்கள் தொடர்கதை ஆகாமல் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் எடுத்து வருகின்றனவா என்றால் இல்லை.

"அரசு அதிகாரிகள்கூட வந்து பார்க்கவே இல்லை" என்று பொதுமக்கள் குறை சொல்வதைத்தான் ஊடகங்களில் பார்க்கிறோம். இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ள நிகழ்வு, பெரும் சோகத்தை எழுப்பி உள்ளது.

மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனிக்கு அருகில் தனியார் ஒருவர், தனது வீட்டைச் சுற்றிலும் 20 அடி உயரத்தில் 80 அடி நீளத்தில் சுற்றுச்சுவர் ஒன்றைக் கட்டி வைத்துள்ளார். இந்தச் சுவர், உரிய பாதுகாப்பு இல்லாமல் கட்டப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் அந்த வீட்டின் உரிமையாளரிடமே சொல்லி இருக்கிறார்கள். அவர் ஆவன செய்யாத நிலையில், அரசு அதிகாரிகளுக்கும் மனுக்கள் கொடுத்துள்ளார்கள்.

விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இந்தச் சுவரை அகற்ற மாவட்ட நிர்வாகமோ, அதிகாரிகளோ, மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரோ, நடவடிக்கை எடுக்கவில்லை. பிரச்சினையைக் காதில்கூடப் போட்டுக் கொள்ளாமல் காலம் தாழ்த்தி இருக்கிறார்கள்.

இது அந்த வட்டாரத்தில் 'தீண்டாமைச் சுவர்' என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் (டிசம்பர் 2) அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக அந்தச் சுவர் இடிந்து, அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்துள்ளது.

ஆனந்தன், அருக்காணி, சிவகாமி, குருசாமி, ஒபியம்மாள் ஆகிய ஐவரின் குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்கள். இவர்களின் உடல்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்காகக் கொண்டு வந்துள்ளார்கள்.

"அந்தச் சுவரின் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும்" என்று, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காவல்துறை, இறந்த உடல்களை கோவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சித்துள்ளது. பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் வைத்திருக்கிறார்கள்.

"இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்று, கோவை - நீலகிரி நெடுஞ்சாலையில், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்துள்ளார்கள். அவர்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. "மூன்று மணிக்குள் சொல்கிறோம்" என்று ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பி வைத்துள்ளார்கள்.

சாலை மறியல் செய்தவர்கள், இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்காக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் கூடி இருந்துள்ளார்கள். அவர்களைக் கலைப்பதற்காக, காவல்துறை வெறிகொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது.

"வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதை"ப் போல, எதற்காக இத்தகைய தாக்குதலை காவல்துறை நடத்த வேண்டும்? திட்டமிட்டு பொதுமக்களை கண்மண் தெரியாமல் தாக்கியுள்ளார்கள். அதுவும் மருத்துவமனை வளாகத்திலேயே இத்தாக்குதல் நடந்துள்ளது.

மிகப்பெரிய போர்ச்சூழலில் கூட மருத்துவமனைகள், "பாதுகாக்கப்பட்ட பகுதிகள்" என்று அறிவிக்கப்படும். மருத்துவமனை வளாகத்தில் எத்தகைய தாக்குதல்களும் நடத்தக் கூடாது என்ற தார்மீக நெறிமுறைகளை எல்லாம் மீறி இத்தாக்குதல் நடந்துள்ளது. பொதுமக்களை விரட்டி விரட்டி அடித்துள்ளார்கள்.

தமிழ்ப்புலிகள் என்ற அமைப்பைச் சேர்ந்த நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டுள்ளார். உடல்களை வாங்கி உடனடியாக அடக்கம் செய்ய காவல் துறையால் அக்குடும்பத்தினர் மிரட்டப்பட்டுள்ளார்கள். மருத்துவமனைக்கு உள்ளே வைப்பதற்கு இடம் இல்லாததால், இறந்த உடல்களை கொட்டும் மழையில் வெளியில் வைத்துள்ளார்கள். இவ்வளவும் மாவட்ட ஆட்சியர், காவல் துறை உயரதிகாரிகள் இருக்கும் போது, அவர்கள் கண்ணெதிரிலேயே நடந்துள்ளது.

மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனி மக்களைத் திட்டமிட்டுப் பழிவாங்கும் நோக்கம் அதிகாரிகளுக்கு இருந்துள்ளது. இதற்குக் காரணமான அதிகாரிகள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தையும் காவல் துறையையும் அநியாயமான முறையில் ஆட்டுவிப்பது யாரென்று ஊர் உலகத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும். சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசு அறிவித்திருக்கும் இழப்பீடு போதாது. இறந்த 17 பேரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அப்பகுதி மக்களுக்கு தரமான வீடுகள் இலவசமாகக் கட்டித் தரப்பட வேண்டும்.

17 பேரின் உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதைக் கரைக்கவில்லை. தடியடித் தாண்டவமாடி அராஜகம் செய்துள்ளது மாவட்ட நிர்வாகம். இது பாதிக்கப்பட்டோரைப் பார்த்துப் பரிகசிக்கும் இரக்கமற்ற அரசு என்பதற்கு இப்போது இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை" என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x