

முரசொலி நிலம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக திமுக சார்பில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக செயலாளர் சீனிவாசனுக்கு எதி ராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
திமுக நாளிதழான ‘முரசொலி’ அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று ட்விட்டரில் பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவிட்டு இருந்தார். ‘அது பஞ்சமி நிலம் என நிரூபித்துவிட்டால், அரசியலை விட்டே விலகிவிடுகிறேன். அப்படி நிரூபிக்காவிட்டால் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகிய இருவரும் அரசியலை விட்டே விலகத் தயாரா?’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பட்டா நகலையும் வெளியிட்டார்.
‘பட்டாவை பதிவிட்டால் போதுமா? மூலப்பத்திரம், சொத்து ஆவணங்கள் எங்கே?’ என்று ராமதாஸ் மீண்டும் கேள்வி எழுப்பினார். உரிய இடத்தில் அவற்றை சமர்ப்பிப்பேன் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசனும் திமுகவை விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதுபற்றி விசாரணை நடத்தக் கோரி தேசிய எஸ்.சி. ஆணையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார்.
5-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
இந்நிலையில், இந்த விவ காரம் தொடர்பாக திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி அவதூறு பரப்பியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக செயலாளர் சீனி வாசன் ஆகியோருக்கு எதிராக எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் முரசொலி அறக்கட்டளை அறங்காவலரான ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை ஏற்பது தொடர் பான விசாரணையை எழும்பூர் நீதிமன்றம் வரும் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.