Published : 03 Dec 2019 08:59 AM
Last Updated : 03 Dec 2019 08:59 AM

தொடர் மழையால் 37 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால் அடையாறு ஆற்றில் கரைபுரளும் வெள்ளம்: தாம்பரத்தில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

அடையாறு ஆற்றின் அருகில் உள்ள 37 ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் வினாடிக்கு 10,000 கனஅடி நீர் ஆற்றில் கலக்கிறது. மேலும், ஆற்றில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி நீர் வெளியேறி கடலில் கலக்கிறது. ஓரத்தூர் - ஆரம்பாக்கம் ஏரியை இணைத்து நீர்த்தேக்கம் உருவாக்கியுள்ளதுபோல் தாம்பரம் சுற்றுப்பகுதியில் புதிய நீர்த்தேக்
கம் அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

படப்பை அருகேயுள்ள, ஆதனுாரில் தொடங்கும் அடையாறு ஆறு, மணிமங்கலம், வரதராஜபுரம், திருநீர்மலை, அனகாபுத்தூர், கவுல் பஜார், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை, பட்டினப்பாக்கம் வழியாக, கடலுக்குச் செல்கிறது. கடந்த 2015 மற்றும் 2017-ம் ஆண்டு, ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், அடையாற்றை ஒட்டிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன.

குடியிருப்புகளை, 10 அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து அடையாறு ஆற்றை வருவாய் ஆவணங்களில் உள்ளது போல் புனரமைக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஆதனூர் முதல் மணப்பாக்கம் வரை 24 கி.மீ. தூரத்துக்கு ரூ.19 கோடியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. அதே போல் அடையாறு ஆற்றில் இணையும் சோமங்கலம், ஒரத்தூர், மணிமங்கலம் போன்ற கிளை ஆறுகளையும் (14 கி.மீ.) சீரமைக்கும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் படப்பை, மணிமங்கலம், தாம்பரம், ஆதனூர் உள்ளிட்ட அடையாறு ஆற்றின் சுற்றுப் பகுதியில் உள்ள 37 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் வினாடிக்கு 10,000 கனஅடி உபரி நீர் அனைத்தும் கால்வாய் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது. அதேபோல் குடியிருப்பு பகுதியில் இருந்தும் மழைநீர் கால்வாய் வழியாக ஆற்றில் கலக்கிறது. இதனால் மழை வெள்ளம் அடையாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.

அடையாறு ஆற்றில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி நீர் வெளியேறி கடலில் கலக்கிறது. பல இடங்களில் தரைப்பாலத்தை தொட்டபடி செல்லும் வெள்ளத்தை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் அடையாறு ஆறு முறையாக சீரமைக்கப்பட்டதால், தற்போது 80 சதவீதம் குடியிருப்புகளில் மழை வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அரசின் திட்டமிட்ட பணியால் இந்த முறை பெரியஅளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால், வெள்ள பாதிப்பின்றி புறநகர் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சீரமைப்புப் பணியை மேற்கொண்ட பொதுப்பணித் துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

அரசின் சிறப்பான திட்டத்தாலும், பொதுப்பணித் துறையினரின் தீவிர பணியால் அடையாறு சீரமைக்கப்பட்டது. இதனால் மழை வெள்ளத்தால், இந்த முறை தாம்பரம் சுற்றுப் பகுதிகளில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. மழைநீர் சில ஒருமணி நேரத்தில் வடிந்து விடுகிறது. ஒரு சில உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால் குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் தேங்கியிருந்தது.

கோடைகாலத்தில் குடிநீருக்காக மக்கள் கடும் அவதிப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால், மழைக் காலத்தில் அதிக மழை கிடைத்தும் நம்மால் அதை முழுமையாகச் சேமிக்க முடியாத நிலையில்தான் உள்ளோம். எனவே ஓரத்தூர் - ஆரம்பாக்கம் ஏரியை இணைத்து நீர்த்தேக்கத்தை அரசு உருவாக்கியுள்ளது. அதேபோல் தாம்பரம் சுற்றுப்பகுதியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x