

கோவை மாவட்டம் மேட்டுப்பாளை யத்தில் நேற்று அதிகாலை ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் இருந்த ஓட்டு வீடுகள் மீது விழுந்ததில், உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை யால், பல இடங்களில் பாறைகள், மண் சரிவு, மரங்கள் முறிந்து விழுவது என பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.
மேட்டுப்பாளையத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மேட்டுப்பாளையத்தில் மட்டும் 18 செ.மீ. மழை பதிவானது.
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட ஏ.டி.காலனி கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் நூற் றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு குடியிருப்பின் பின் பக்கத்தில் சுமார் 80 அடி நீளம், 20 அடி உயரத் தில் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது. கனமழையால் நேற்று அதிகாலை 4.15 மணி யளவில் இந்த சுவர் இடிந்து, அருகில் இருந்த 4 வீடுகளின் மீது விழுந்தது.
சாதாரண ஓட்டு வீடு களின் மீது, கனமான கருங்கல் சுவர் இடிந்து விழுந்ததால், அந்த வீடு களும் இடிந்தன. உள்ளே உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உடல் நசுங்கி, வீடுகளுக்குள் புதைந்து உயிரிழந்த னர். 4 வீடுகளும் முற்றிலுமாக சிதைந்து மண்ணுக்குள் புதைந்தன.
கனமழை பெய்து, இருள் சூழ்ந்த நேரத்தில் விபத்து நேரிட்டதால், அரு கில் இருந்தவர்களுக்குகூட விபத்து குறித்து உடனடியாகத் தெரிய வில்லை.
காலை 6 மணிக்குப் பிறகே அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விபத்து குறித்து தெரிந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டு, இடிபாடு களில் சிக்கியிருந்த சடலங்களை மீட்கத் தொடங்கினர். தகவலறிந்து வந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறை யினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பேரிடர் மீட்புக் குழுவினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டன.
கூலித் தொழிலாளிகள்
இந்த விபத்தில் ஆனந்தகுமார் (40), அவரது மனைவி நதியா (30), மகன் லோகுராம் (9), மகள் அக்சயா (7), மாமியார் ருக்மணி (48), அருக் காணி (50), மகள்கள் ஹரிசுதா (16), மகாலட்சுமி (12), அருக் காணியின் அம்மா சின் னம்மாள் (70), சிவ காமி (48), அவரது மகள்கள் வைதேகி (21), நிவேதா (18) மகன் ராமநாதன் (18), உறவினர் ஓபியம்மாள் (50), குருசாமி (42), மங்கம்மாள் (63), திலகவதி (48) ஆகி யோர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும் பாலானோர் கட்டிடக் கூலித் தொழிலாளி களாகவும், விவசாயம் மற்றும் காய் கறி மண்டிகளில் கூலித் தொழிலாளி களாகவும் பணிபுரிந்து வந்தனர். மீட்கப் பட்ட உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக் கப்பட்டன.
சம்பவ இடத்தில் ஆய்வு மேற் கொண்ட மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணியை சூழ்ந்துகொண்ட அப்பகுதி பொதுமக்கள், விபத்துக்குக் காரண மாக காம்பவுண்ட் சுவர் அமைந்துள்ள வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும், தடுப்புச் சுவரை முழுவதுமாக இடிக்க வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத் தித் தர வேண்டுமென்று வலி யுறுத்தினர்.
மேற்கு மண்டல காவல் துறை தலைவர் கே.பெரியய்யா, கோவை சரக டிஐஜி கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் இன்று மேட்டுப்பாளையம் சென்று, விபத்து நடந்த பகுதியை பார்வையிட உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண நிதியை அவர் நேரில் வழங்கவும் வாய்ப்பு உள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.