

கால்நடை மருத்துவரைத் தாக்க முயன்ற யானையைப் பாகன் இடையில் புகுந்து தடுத்ததால் அவரைத் தாக்கிக் கொன்றது. இதுவரை 5 பேரை யானை கொன்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா விளங்குகிறது. இந்த வன உயிரியல் பூங்காவில் பல்வேறு உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வன உயிரியல் பூங்காவில் கடந்த 2009-ம் ஆண்டு ஆண்டாள் என்ற யானை கொண்டு வரப்பட்டது. இந்த யானையின் பாகனாக பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் இருந்தார்.
யானைக்கு வயோதிகம் காரணமாக பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. இதனால் பூங்காவில் வைத்து, பராமரிக்க முடியாததால் திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு அனுப்ப மாவட்ட வனத்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை யானையின் உடல் நலம் குறித்து பரிசோதனை செய்யப்படும்.
கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் மருத்துவர்கள் இன்று மாலை யானையைப் பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது திடீரென யானைக்கு மதம் பிடித்தது. இதனால் யானை மருத்துவரைத் தாக்கியது. அப்போது மருத்துவரைக் காப்பாற்ற யானைப் பாகன் காளியப்பன் முயன்றார். அதனால், யானையின் கோபம் பாகன் பக்கம் திரும்பியது. பாகனை யானை மிதித்துக் கொன்றது. இதில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பாகனின் உடலை விடாமல் யானை சுற்றிச் சுற்றி வந்தது.
இது குறித்துத் தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் யானை ஆக்ரோஷமாக இருந்ததால் யானை இருந்த இடத்திலிருந்து உயிரிழந்த காளியப்பன் சடலத்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வனத்துறை அலுவலர்கள் உதவியுடன், யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
ஏறத்தாழ 2 மணிநேர நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காளியப்பன் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட காளியப்பன் உடல், சேலத்தில் உள்ள மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு மேலும் ஆண்டாள் யானை பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.
ஆண்டாள் யானை தாக்கியதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே மதுரை கள்ளழகர் கோயிலில் மூன்று பேரை தாக்கிக் கொன்றது. சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கடந்த 2013-ம் ஆண்டு பத்மினி என்கிற பெண்ணைத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.