Published : 02 Dec 2019 08:40 PM
Last Updated : 02 Dec 2019 08:40 PM

கோவையில் 17 வயது சிறுமி மீதான பாலியல் வன்முறை; நடவடிக்கை தேவை: மக்களவையில் டி.ஆர்.பாலு கோரிக்கை

கோவையில் 17 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய கும்பலைக் கைது செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்தார்.

கோவையில் 11-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுமி தனது உறவினர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். கடந்த 26-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக அந்த இளைஞருடன் சிறுமி அருகில் உள்ள பூங்காவுக்குச் சென்றார்.

அப்போது, அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரைத் தாக்கி சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக, ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் 4 பேரைக் கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனர். அவர்கள் மீது போக்ஸோ சட்டம், பாலியல் பலாத்கார வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

அங்கு விவாதத்தில் திமுக நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு பேசியதாவது:

“கோவை மாநகரில் நவம்பர் 26 அன்று முன்னிரவு நேரத்தில் 17 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளனர். அப்பெண்ணுடன் சென்ற இளைஞனையும் அடித்து நொறுக்கி சாலையில் வீசியுள்ளது. இதைப் போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இப்படிப்பட்ட மோசமான சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு மாநில அரசுகள்தான் காரணம் என மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க இயலாது. பாலியல் வன்முறைக்குக் காரணமானவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். அதற்கான உத்தரவை உடனடியாக மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும்.

மத்திய அரசின் ஆசி பெற்றுள்ள அரசு தமிழ்நாட்டில் நடந்து வருவதால் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு, இதுபோன்ற பாலியல் வன்முறைகள் நடைபெறுவதை தடுக்கவும் - இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்”.

இவ்வாறு டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x