

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம் குறித்த புகார்களை 24/7 மணிநேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்கலாம் என ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக பிரகாஷ் பொறுப்பேற்றது முதல் அதிகாரிகள், கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களின் புகார் வந்தால் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு நேரடியாக வரும் புகார்களையும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி அதைச் சரி செய்தபின்னர் அந்தப் படத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
இதேபோன்று பொதுமக்கள் புகார்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்க சென்னை மாநகராட்சி வாட்ஸ் அப் எண் ஒன்றைத் தொடங்கி அதன்மூலம் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க வகை செய்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட அறிவிப்பு:
“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்குப் பருமழையின் காரணமாக தங்கள் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் மழைநீர் தேக்கம், சாய்ந்த மரக்கிளைகள் மற்றும் இதர புகார்கள் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இயங்கும் 24/7 மணிநேரம் கட்டுப்பாட்டு அறையின் 044-25384520, 044- 25384530, 044-25384540 தொலைபேசி எண்களுக்கும், 9445477205 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வரின் உத்தரவின்படி அமைச்சர் வேலுமணி தலைமையில் தொடர்புடைய துறைகளுடன் பல்வேறுகட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் 16 சுரங்கப்பாதைகளும், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் 6 சுரங்கப்பாதைகளும் உள்ளன. இவ்விடங்களில் மழைநீர் வெளியேற்ற ஏதுவாக 60 எண்ணிக்கையில் உயரழுத்த பம்புகள், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற 570 மோட்டார் பம்புகள், தயார் நிலையில் உள்ளன.
மேலும், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை இயந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மழைவெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு 109 இடங்களில் படகுகளும், பொதுமக்களைத் தங்க வைக்க 176 நிவாரண மையங்களும், உணவு வழங்கிட 4 பொது சமையல் அறைகளில் 1,500 பேருக்கு சமையல் செய்யத் தேவையான பொருட்களும் உள்ளன. அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க 50 இடங்களில் அம்மா குடிநீர் மையங்களும், மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களும், 52 இடங்களில் பேரிடர் மீட்புக்குழுக்களும் தயார்நிலையில் உள்ளன.
பருவமழையின்போது சாலைகளில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற மண்டலத்திற்கு 1 இரவு பணிக்குழுவும், 18 உயர் கோபுர விளக்குகளும் தயார் நிலையில் உள்ளன. அவரசகாலப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 108 ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரங்களும், 126 லாரிகளும் தயார் நிலையில் உள்ளன.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 /7 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இக்கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர், தமிழ் நாடு மின்வாரிய அலுவலர் மற்றும் காவல்துறை அலுவலர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு சுழற்சி முறையில் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகின்றனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி 1,894 கி.மீ. நீளத்திற்கு 7,351 எண்ணிக்கையில் மழைநீர் வடிகால்களைப் பராமரித்து வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 468 இடங்களில் சுமார் ரூ.440 கோடியில் மதிப்பீட்டில் 155.49 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் மழைநீர் வடிகால்களில் மழைநீர் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக சுமார் ரூ.35.05 கோடி செலவினத்தில் தூர்வாரும் பணிகள் மற்றும் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை மாநகரின் விரிவாக்கப் பகுதிகளான, அம்பத்தூர் மண்டலம், வளசரவாக்கம் மண்டலம் மற்றும் ஆலந்தூர் மண்டலம் பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு முன்னால், பலஆண்டுகளாக மழைநீர் தேங்கி பிரச்சினையாக இருந்த இந்தப் பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்ட பிறகு வெள்ளம் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழ், பாடிக்குப்பம் கால்வாய், நந்தம்பாக்கம் கால்வாய், நொளம்பூர் கால்வாய் மற்றும் அம்பத்தூர்-சிட்கோ கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அந்தக் கால்வாய்கள் ஆழம் மற்றும் அகலப்படுத்தப்பட்டு அவற்றில் வெள்ளத்தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தக் கால்வாய்களின் வெள்ளநீர் கொள்ளவு திறன் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு, வெள்ளநீர் உடனடியாக வெளியேறி வெள்ளம் தேங்காத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி, கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், எம்.ஜி.ஆர். கால்வாய், ஏகாங்கிபுரம் கால்வாய், வியாசர்பாடி கால்வாய், ஜவஹர் கால்வாய், டி.வி.எஸ். கால்வாய், மாம்பலம் கால்வாய், கிண்டி தொழிற்பேட்டை கால்வாய், ராஜ்பவன் கால்வாய், ரெட்டி குப்பம் கால்வாய் போன்ற 30 சிறிய கால்வாய்களைப் (micro canals)) பராமரித்து வருகிறது.
இந்த அனைத்துக் கால்வாய்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள நவீன ரொபோடிக் மண்தோண்டும் இயந்திரம் (Robotic Excavator) மூலம் முறையான கால இடைவெளியில் தூர்வாரப்பட்டு ஆழம் மற்றும் அகலப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் இந்த 30 கால்வாய்களின் நீரை வெளியேற்றும் அளவும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் நகர் முழுவதும் வெள்ளம் தேங்குதல் என்பது பெருமளவு குறைந்துள்ளது.
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் இணைந்து பருவமழையின் போது மழைநீர் வீணாகாமல் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் அனைத்துக் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைத்தல், சாலையோரங்களில் உறை கிணறுகள் அமைத்தல், பயன்பாடற்று இருந்த சமூதாயக் கிணறுகளை கண்டறிந்து அவற்றிக்கு அருகாமையிலுள்ள தெருக்கள் மற்றும் வீடுகளிலிருந்து மழைநீர் சேகரிக்கும் வகையில இணைப்புகள் ஏற்படுத்துதல், ஏரி குளம் போன்ற நீர்நிலைகளை தூர்வாரி மறுசீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டதன் விளைவாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம் குறைந்து நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது”.
இவ்வாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.