உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: திட்டமிட்ட ஏமாற்று வேலை; வைகோ குற்றச்சாட்டு

வைகோ: கோப்புப்படம்
வைகோ: கோப்புப்படம்
Updated on
1 min read

புதிய மாவட்டங்களுக்கு வார்டுகள் வரையறை செய்யாமல், உள்ளாட்சித் தேர்தலை அறிவித்திருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலை என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

3 ஆண்டுகளாக நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் நீண்ட இழுபறிக்குப் பின் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். மாநகராட்சி, நகராட்சிகளுக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை

இதுதொடர்பாக வைகோ இன்று (டிச.2) வெளியிட்ட அறிக்கையில், "உள்ளாட்சித் தேர்தல் என்பது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் அனைத்துக்கும் சேர்த்து நடத்தப்பட வேண்டிய தேர்தலாகும். ஆனால் தமிழக அரசு, ஊராட்சிகளுக்கு மட்டும் முதலில் தனியாகத் தேர்தல் நடத்துவதாக அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்ட வஞ்சகத் திட்டமாகும்.

தேர்தலையே தள்ளிப் போடுவதற்காக நீதிமன்றங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்ற வகையில் ஏற்பாடு செய்துவிட்டு, திமுகவின் மீது அபாண்டமாக பழி சுமத்துவது ஆளும் அரசாங்கத்தின் தந்திரம் நிறைந்த சூழ்ச்சியாகும் என்பதால், மாநில அரசின் இந்த அறிவிப்பைக் கண்டிப்பதோடு, புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் சேர்த்து வார்டுகள் பிரிவினை செய்யாமல், தமிழக அரசு இந்த அறிவிப்பைச் செய்திருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலையாகும்" என வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in