

தேர்தல் ஆணையர் பழனிச்சாமியா அல்லது முதல்வர் எடப்பாடி பழனிசாமியா என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று (டிச.2) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஸ்டாலின், "மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக காலம் தாழ்த்தி வந்தது. ஆனால் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் யாரேனும் நீதிமன்றத்திற்குச் சென்று தடை பெற வேண்டும் என்பதற்காக அதிமுக முயற்சித்தது, அதன் மூலம் தடை பெறலாம் எனவும் நினைத்தது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொகுதி மறு சீரமைப்பு முறையாக செய்யவில்லை என்று தான் திமுக உயர் நீதிமன்றம் சென்றது. ஆனால் தேர்தலை நிறுத்த திமுக எந்த விதத்திலும் முயற்சிக்கவில்லை. ஆனால், அதிமுக அமைச்சர்கள் திமுகதான் தேர்தலை நிறுத்த முயற்சிக்கின்றது என பொய்யாக குற்றம் சாட்டி வருகின்றார்கள்.
தொகுதி மறு சீரமைப்பு குறித்து தேர்தல் ஆணையத்திடம் திமுக பலமுறை கேட்டும் உரிய பதில் கிடைக்காததால் உச்ச நீதிமன்றம் சென்றோம். தேர்தல் ஆணையர் பழனிச்சாமியா அல்லது முதல்வர் எடப்பாடி பழனிசாமியா எனத் தெரியவில்லை. மாநில தேர்தல் ஆணையத்தினுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது.
சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்திய நிலையில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது வேடிக்கையாக உள்ளது. உச்ச நீதிமன்றம் சென்று தேர்தலை முறையாக நடத்த அணுகுவோம்" என்று ஸ்டாலின் தெரிவித்தார்.