Published : 02 Dec 2019 12:39 PM
Last Updated : 02 Dec 2019 12:39 PM

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6.60 அடி உயர்வு: தாமிரபரணியில் வெள்ளம் அதிகரிப்பு 

திருநெல்வேலி கருப்பந்துறையில் பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளத்தை பார்க்கும் மக்கள் | படங்கள்: மு. லெட்சுமி அருண்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இடைவிடாது பெய்த மழையால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது.

மழை அளவு

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறில் 150.60 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:

சேர்வலாறு- 147.37, பாபநாசம்- 142.60, அம்பாசமுத்திரம்- 95.30, பாளையங்கோட்டை- 80, சேரன்மகாதேவி- 67, திருநெல்வேலி- 66, ராதாபுரம்- 48, நாங்குநேரி- 44.20, கொடுமுடியாறு அணை- 30, நம்பியாறு அணை- 15.25, வடக்கு பச்சையாறு அணையில் 13.50 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

அணைகள் நிலவரம்

நேற்று காலை நிலவரப்படி பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கான மொத்த நீர் வரத்து விநாடிக்கு 8,630 கன அடியாக இருந்தது. அணைகளின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 9,281 கனஅடி நீர்வெளியேற்றப்பட்டது. பாபநாசம் அணை நீர்மட்டம் 141.65 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 148.16 அடியாகவும் இருந்தது.

மணிமுத்தாறு அணைக்கு நேற்று நீர் வரத்து அதிகரித்தது. விநாடிக்கு 6,800 கனஅடி நீர் வந்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் சீறிப் பாய்ந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6.60 அடி உயர்ந்து 92.40 அடியாக இருந்தது.

இதேபோல், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில்13 அடி உயர்ந்து 26.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,077 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. நம்பியாறு அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 16.27 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 276 கனஅடி நீர் வந்தது.

அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 38 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 183 கனஅடி நீர் வந்தது. 50 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைநீர்மட்டம் மற்றும் நீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


பாளையங்கோட்டை அண்ணாநகரில் வீட்டில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றிய பெண்.

நிலைமைக்கேற்ப நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அதிகபட்சமாக விநாடிக்கு 11,510 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அத்துடன், தாமிரபரணி கரையோர பகுதிகளில் பெய்த மழை நீரும் ஆற்றில் கலந்து கரைபுரண்டு ஓடியது. நேற்று காலையில் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் மேலும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று காலை முதல் படிப்படியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மதியம் முதல் நள்ளிரவு வரை இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனாநதி அணையில் 75 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:

ராமநதி அணை- 63, குண்டாறு அணை- 61, செங்கோட்டை- 57, தென்காசி- 47, ஆய்க்குடி- 37.60, சங்கரன்கோவில்- 22, கருப்பாநதி அணை- 16, அடவிநயினார் கோவில் அணை- 12, சிவகிரியில் 10 மி.மீ மழை பெய்தது.

அருவிகளில் குளிக்க தடை

மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. பிரதான அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. புலியருவியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் அங்கு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நீராடினர்.

கடனாநதி அணை, கருப்பாநதி அணை, குண்டாறு அணை, அடவிநயினார் கோவில் அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பியதால், அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடனாநதி அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருப்பதால் கூடுதலாக நீர் வெளியேற்றப்பட்டது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 1,557 கனஅடி நீர் வந்தது. அணை பாதுகாப்பு கருதி 1,688 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 83 அடியாக இருந்தது.

ராமநதி அணை நிரம்புகிறது

ராமநதி அணை நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து 82 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 250 கனஅடி நீர் வந்தது. 192 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 84 அடி உயரம் உள்ள ராமநதி அணைநிரம்பும் நிலையில் உள்ளது. கருப்
பாநதி அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 88 கனஅடி, அடவிநயி
னார் கோவில் அணையில் இருந்து 61 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குளங்களும் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகலில் மழையின் தீவிரம் குறைந்து அவ்வப்போது லேசான மழை பெய்தது. கருப்பந்துறை பாலம் மூழ்கியது பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பியதால் உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட் டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீர் வரத்து அதிகரித்
ததால், திருநெல்வேலியில் உள்ள கருப்பந்துறை பாலம் மூழ்கியது. இதனால், மேலப்பாளையம்- திருநெல்வேலி டவுன் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

குறுக்குத்துறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில், தைப்பூச மண்டபம் அருகில் உள்ள சுடலைமாட சுவாமி கோயில், இசக்கியம்மன் கோயில் ஆகியவற்றை வெள்ளம் சூழ்ந்தது. பாபநாசம் அணை அருகில் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றது. கோயிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. அகஸ்தியர் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து
கொட்டியது.


கருப்பந்துறையில் வெள்ளத்தில் இருந்து கோழிகளை மீட்டு வரும் மக்கள்.

மழைக்கு வீடுகள் சேதம்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கின. தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தன. திருநல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே குசவன்குளத்தில் மழைக்கு வீடு இடிந்து கந்தசாமி (81) என்பவர் உயிரிழந்தார். விக்கிரமசிங்கபுரம் காமாட்சி நகரைச் சேர்ந்த பரமசிவன், வளையார் மடத்தைச் சேர்ந்த சாந்தி, கருத்தையாபுரத்தைச் சேர்ந்த சித்ரா, டாணா பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம், திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் ராமகிருஷ்ணன் ஆகியோரின் வீடுகள் மழைக்கு சேதமடைந்தன. சிந்துபூந்துறை, திடியூரில் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள நன்னகரத்தை சேர்ந்த முத்தையா, கடையம் அருகே உள்ள கேளையாபிள்ளையூரில் சிவகாமி, ஆழ்வார்குறிச்சி அருகே பரும்பு கிராமத்தில் ஈஸ்வரி ஆகியோரின் வீடுகள் சேதமடைந்தன. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x