

தியாக உள்ளம் படைத்த வெள்ளுடை தேவதைகள்தான் செவிலியர்கள் என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
செவிலியர்கள், மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று (டிச.2) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
"தூய தண்ணீர், தூய காற்று, திறமையான வடிகால்கள், தூய்மையான சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையான சூரிய ஒளி ஆகிய ஐந்து காரணங்களில் ஏதேனும் ஒன்று குறை பட்டாலும் அது மனிதனின் உடல் நலிவுக்கு காரணமாக அமைந்து விடும். அவ்வாறு மனிதனின் உடலில் ஏற்படும் நலிவு, பலவிதமான நோய்கள் உடலில் குடிபுக வழி அமைத்துத் தந்து விடுகிறது.
இதனால்தான் நேரான பழக்கங்களை மேற்கொண்டு சீரான முறையில் நம் உடலை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
உடல் நோய் கண்டு விட்டால், நிம்மதி கரைந்துபோகும். மகிழ்ச்சி மறைந்து போகும். அதனால் தான், நமது முன்னோர்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று பழமொழி வகுத்துத் தந்தார்கள்.
பெருகி வரும் மக்கள் தொகை, வளர்ந்து வரும் விஞ்ஞானப் புதுமைகள், உழைக்கும் நேரத்தை மட்டுமல்ல, நமது உறங்கும் நேரத்தையும் பறித்துக் கொள்ளும் கணினி மற்றும் சமூக வலைதளங்கள், திட்டமிட்டு நம்மை சோம்பேறிகளாக்கும் கைபேசி செயலிகள் என புதுப்புது காரணிகள், நோய்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து நம் உடலில் குடியேற வழி அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த ஆட்சிக் காலம், தமிழக மக்களின் பொற்காலம் என்று தற்கால தலைமுறையும், வருங்காலச் சந்ததியினரும் வாழ்த்துவார்கள்.
கடந்த 8 ஆண்டுகளில், 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு, 1,350 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 1,213 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டு, ஒரே ஆண்டில் மட்டும், 9 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 900 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் தமிழகத்திற்கு கூடுதலாக கிடைத்துள்ளன.
செவிலியர் என்று சொல்லும் போது, பள்ளிப் பருவத்தில் எனது ஆசிரியை ஒருவர் சொன்ன கதை ஒன்று என் நினைவுக்கு வருகிறது.
அன்றொரு நாள் கைலாயத்தில் ஈசனும், தேவியும் அமர்ந்திருக்கும்போது, அந்தப் பக்கம் நாரத முனிவர் வந்தார். பொதுவாக நாரதர் என்றாலே கலகமூட்டுபவர் என்றுதான் சொல்வார்கள், ஆனால் அன்று பூவுலக மக்களின் சார்பாக, ஒரு கோரிக்கையை முன் வைக்கவே அவர் வந்திருந்தார்.
நாரதர் நேராக ஈசனிடம் சென்று, "இறைவா, நான் இந்த பூவுலகை சுற்றி விட்டு வருகிறேன். அங்கே மனதிற்கு மிகுந்த துன்பம் தரும் காட்சி ஒன்றைக் கண்டேன் அது குறித்து சொல்லவே உங்களிடம் வந்திருக்கிறேன்" என்றார்.
"சரி, சொல்" என்று ஆண்டவன் ஆணையிட, நாரதர் சொல்ல தொடங்கினார்.
"கடவுளே, பூமியில் காயம் பட்டவர்களும், நோய்வாய்ப்பட்டவர்களும் கவனிக்க தக்க ஆள் இன்றி மிகவும் துன்பத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற நீங்கள் ஒருவரை படைக்க வேண்டும்" என்று கோரினார்.
"ஏன், அவர்களைப் பெற்ற தாய் தந்தை இல்லையா?" என்று கேட்டார் ஈசன்.
"அவர்களுக்கு வயதாகிவிட்டதே அவர்களால் எப்படி பார்த்துக் கொள்ள முடியும்?" என்று எதிர்க்கேள்வி போட்டார் நாரதர்.
"சரி, அவர்கள் பெற்ற பிள்ளைகள் இருப்பார்களே, அவர்கள் என்ன செய்கிறார்கள்?" என்று கேட்டார் கடவுள்.
அதற்கு நாரதர், "அவர்கள் சின்னப்பிள்ளைகளாக இருக்கிறார்கள், இல்லையென்றால், அவர்களுக்கென்று ஒரு தனிக்குடும்பம், வேலை என்று ஆகிவிட்டது. அதை விட்டுவிட்டு முழுநேரமும் அவர்களால் கவனிக்க முடியவில்லை" என்றார்.
"போகட்டும், அண்ணன், தம்பி, உற்றார் உறவினர் யாரும் உதவிக்கு வருவதில்லையா?" என்று கேட்ட கடவுளுக்கு, "அவர்களுக்கும் நான் மேலே சொன்ன காரணம்தான்" என்று பதில் சொன்னார் நாரதர்.
“அப்படியானால், தாய், தந்தையை விட அன்பு காட்டுபவராக, பெற்ற பிள்ளைகளைவிட பாசம் காட்டுபவராக, உடன்பிறந்தோரைவிட பரிவு காட்டுபவராக, தியாக உள்ளத்துடன் ஒருவரைப் படைக்க வேண்டும் என்கிறாய் அல்லவா?" என்று கேட்டார் ஈசன்.
அதற்கு நாரதரும், "இறைவா, நான் எதை கேட்க வந்தேனோ அதை அப்படியே சொல்லி விட்டீர்கள்" என்றார்.
அப்போது அருகில் இருந்த பார்வதி தேவி, "இத்தனை குணநலன்களும் பொருந்தியவர்கள் என்றால் அவர்கள் தேவதைகளாகத்தான் இருக்க முடியும்" என்று கூறினார்.
"தேவி கூறியபடியே செய்து விடுவோம்" என்று சொன்ன ஈசன், நாரதரிடம், "இத்தனை நற்குணங்களும் அடங்கிய தேவதைகளைப் படைத்து நான் அனுப்புகிறேன். அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். நீ சென்று வா" என்று அனுப்பி வைத்தார்.
அப்படி, கடவுளால் படைக்கப்பட்டு, இப்பூவுலகிற்கு அனுப்பப்பட்ட, தியாக உள்ளம் படைத்த வெள்ளுடை தேவதைகள்தான், நம்முடைய செவிலியர்கள்"
இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.