Published : 02 Dec 2019 11:28 AM
Last Updated : 02 Dec 2019 11:28 AM

மழை விபத்துகள்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குக; அன்புமணி

மழை சார்ந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தது தலா ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என, பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (டிச.2) வெளியிட்ட அறிக்கையில், "கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த நடூர் கிராமத்தில் அடுத்தடுத்து பல வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றதாகவும், அதனால் சுவர்கள் சேதமடைந்து பல வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த துயரநிகழ்வில் எந்த தவறும் செய்யாத குழந்தைகளும், பெண்களும் உறங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே இடிபாடுகளில் சிக்கி, மூச்சுத் திணறி உயிரிழந்திருப்பது வேதனையானதாகும். இடிபாடுகள் இன்னும் அகற்றப்படவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடலூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதன் காரணமாகவும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் வீடுகளின் சுவர்கள் வலுவிழந்து இத்தகைய விபத்துகள் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளதால் இந்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்கவும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவர்கள் தவிர காவிரி பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் மழை சார்ந்த விபத்துகளில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தது தலா ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x