

மழைக்காலத்தில் நோய் பரவாமல் இருக்க சுகாதாரத்துறையின் தொடர் நடவடிக்கை மிகவும் அவசியமானது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (டிச.2) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களை மழையின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 3 நாட்களாக சென்னை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் சில மாவட்டங்களில் கனமழையும், பல மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதாவது கனமழையின் காரணமாக சில இடங்களில் பேருந்து, ரயில் மற்றும் விமானம் ஆகியவற்றின் போக்குவரத்து தாமதமாகுவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகுகிறார்கள். மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
அதே போல டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி விளைபொருட்கள் சேதமடைந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பல வீடுகள் இடிந்ததும், உயிரிழப்புகள் ஏற்பட்டதும் வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மாநிலம் முழுவதும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழையால் ஏற்படுகின்ற பாதிப்புகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும் தமிழகத்தில் இன்னும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு அறிக்கை வெளிவந்திருப்பதால் தமிழக அரசு மாநிலம் முழுவதும் தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளை இன்னும் துரிதப்படுத்தி, வேகப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டு நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
தமிழக அரசு மாநகராட்சி முதல் குக்கிராமம் வரை அனைத்து பகுதிகளையும் தொடர்ந்து கண்காணித்து குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், மின்கம்பிகள், மின்கம்பங்கள் உள்ளிட்ட மின்கடத்தும் பாதைகளை கண்காணிக்கவும், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர், கழிவுநீர், குப்பைகள் போன்றவற்றை அப்புறப்படுத்தவும், போக்குவரத்துக்கான பாதைகளை சரிசெய்திடவும் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக தற்போதைய மழைக்காலத்தில் நோய் ஏற்படாமல், பரவாமல் இருக்க சுகாதாரத்துறையின் தொடர் நடவடிக்கை மிகவும் அவசியமானது, முக்கியமானது. மேலும் தமிழக அரசு உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, மக்கள்நல்வாழ்வுத்துறை, போக்குவரத்துத்துறை, கால்நடைத்துறை ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தி 24 மணிநேர சேவைப்பணிகளை மேற்கொண்டு மழையின் பாதிப்பில் இருந்து குடிசை வாழ் மக்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களையும், கால்நடைகளையும் பாதுகாத்திட தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.