Published : 02 Dec 2019 09:09 AM
Last Updated : 02 Dec 2019 09:09 AM

விறுவிறுப்படையும் புத்தாண்டு காலண்டர், டைரி விற்பனை: கோல்டு ஃப்ரேம், டூ இன் ஒன் காலண்டர்களுக்கு அதிக வரவேற்பு

தினசரி மற்றும் மாத காலண்டர் இணைந்த ‘டூ இன் ஒன்’ காலண்டர். படம்: பு.க.பிரவீன்

சென்னை

டி.செல்வகுமார்

சென்னையில் புத்தாண்டு காலண்டர் மற்றும் டைரி விற்பனை சூடுபிடித்துள்ளது. கொல்கத்தா தயாரிப்பான ‘கோல்டு ஃப்ரேம்' காலண்டருக்கும், புதிய வரவான ‘டூ இன் ஒன்' காலண்டருக்கும் வரவேற்பு அதிகம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

செல்போன் வருகையால் காலண்டர், டைரி விற்பனை குறைந்துள்ளது. இருப்பினும்,
புத்தாண்டு பிறக்கும்போது வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு காலண்டராவது இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். தினசரி ராசிபலன், நல்லநேரம், கோயில் விஷேசங்கள், அமாவாசை, பவுர்ணமி போன்ற பல்வேறு தகவல்களுக்கு காலண்டர்களைப் பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய கடவுள்களின் படங்கள், இயற்கை காட்சிகள், குழந்தைகள் படங்களுடன் கூடிய காலண்டர்கள் விற்கப்படுகின்றன. விநாயகர், சாய்பாபா, பெருமாள், கிருஷ்ணர், இயேசு, மாதாவின் பல்வேறு தோற்றங்களுடன் 3டி காலண்டர்களும் கிடைக்கின்றன.

“டைரியை தனிநபர் உபயோகத்துக்கு வாங்குவோர் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், பிறருக்கு அன்பளிப்பாக கொடுக்கும் பழக்கம் குறையவில்லை. கடந்த ஆண்டு சுமார் 40 லட்சம் காலண்டர், டைரிகள் விற்பனையாகின. இந்த ஆண்டு 45 லட்சம் வரை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

“புத்தாண்டையொட்டி காலண்டர் மற்றும் டைரிகள் விற்பனை ஓரிரு மாதங்களுக்கு முன்பே சூடுபிடித்துவிடும். இந்த ஆண்டு இப்போதுதான் விற்பனை விறுவிறுப்படைந்தது. மழை காரணமாக வாடிக்கையாளர் வருகை சில நாட்களாகக் குறைந்துள்ளது. இருந்தாலும் மழை இல்லாத நேரங்களில் காலண்டர், டைரி விற்பனை சூடுபிடிக்கிறது” என்று சென்னை பாரிமுனை பந்தர் தெரு மற்றும் ஆண்டர்சன் தெரு மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து காலண்டர், டைரி மொத்த விற்பனையாளர் எம். பாலாஜி கூறியதாவது:

கடந்த காலங்களில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் பாதிப்பு இருந்தது. இந்த ஆண்டு அதுபோல எதுவும் இல்லை. பொருளாதார சரிவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஜிஎஸ்டி வரியால் விலை உயரவும் இல்லை. சிவகாசி, கொல்கத்தா, டெல்லியில் இருந்து காலண்டர், டைரிகள் வந்துள்ளன.

சீனாவின் சிறப்புத் தயாரிப்பான போட்டோ பிரேம் போன்ற ‘கோல்டு ஃப்ரேம்’ காலண்டர்கள் இந்த ஆண்டு கொல்கத்தாவில் கிடைத்தன. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு சென்னை பாரிமுனையில் உள்ள 15-க்கும் மேற்பட்ட மொத்த விலைக் கடைகளில் இருந்துதான் காலண்டர், டைரிகள் அனுப்பப்படுகின்றன.

தனி நபர்கள் மட்டுமல்லாமல், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பலசரக்கு கடை, சூப்பர் மார்க்கெட், பேன்ஸி ஸ்டோர், மருந்துக் கடை, ஹார்டுவேர் போன்ற கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கடை முகவரியுடன் காலண்டர், டைரிகளை மொத்தமாக வாங்குகின்றனர்.

‘மன்த்லி மானிட்டர்’

மாத காலண்டர், தினசரி காலண்டர் இரண்டும் சேர்த்து ‘டூ இன் ஒன்’ புதிய வரவாகும். சிறியதும் பெரியதுமான பலவண்ண மினி காலண்டர் விலை ரூ.15 முதல் மெகா காலண்டர் ரூ.400 வரை கிடைக்கிறது. ‘கோல்டு ஃப்ரேம்’ காலண்டர் விலை ரூ.225, ரூ.300.

மேலும், 3டி காலண்டர் விலை ரூ.140. புதிய வரவு ‘டூ இன் ஒன்’ காலண்டர் ரூ.65, ரூ.95-க்கு கிடைக்கிறது. ‘டேபிள் டாப்’ காலண்டர் ரூ.30 முதல் ரூ.65 வரை விற்கப்படுகிறது. ‘ஆல் இன் ஒன்’ எனப்படும் 12 குட்டி டைரிகளுடன் கூடிய ‘இயர் பிளானர்’ விலை ரூ.80. அதிகாரிகள் விரும்பி பயன்படுத்தும் ‘மன்த்லி மானிட்டர்’ என்பது ஒரே புத்தகமாக இருக்கும். அது ரூ.50, ரூ.60-க்கு விற்கப்படுகிறது” என்றார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், கமல்ஹாசன், சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுடன் கூடிய காலண்டர்களை முறையே அரசியல் கட்சிகள், ரசிகர் மன்றங்கள் மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். அவை கடைகளில் இப்
போது விற்பனை செய்யப்படுவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x