Published : 02 Dec 2019 08:48 AM
Last Updated : 02 Dec 2019 08:48 AM

பெண் மருத்துவர் கொலை வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரணை: தெலங்கானா முதல்வர் உத்தரவு

தெலங்கானாவில் பெண் கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். தெலங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி (26).

இவர், கடந்த புதன்கிழமை இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மர்மநபர்கள் சிலர் அவரை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்தனர். மேலும், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக பிரியங்காவின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக தெலங்கானா போலீஸார் விசாரணை மேற்கொண்டு லாரி டிரைவர்கள் 4 பேரை கைது செய்தனர். அவர்களும், தாங்கள் தான் பிரியங்காவை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

முதல்வர் உத்தரவு

இந்தக் கொடூர சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குற்றவாளிகளுக்கு விரைவில் அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்ற தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று உத்தரவிட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் விரைவில் நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

அதேபோல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருமாறு தெலங்கானா தகவல் தொடர்பு அமைச்சர் கே.டி. ராமாராவ் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

போலீஸார் சஸ்பெண்ட்

இதனிடையே, பிரியங்கா காணாமல் போன புதன்கிழமை நள்ளிரவில் அவரது பெற்றோர் ஷம்ஷாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், அங்கிருந்த போலீஸார், அவர்களின் புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த சைபராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார், சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஷம்ஷாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எம்.ரவிக்குமார், தலைமைக் காவலர்கள் வேணுகோபால் ரெட்டி, சத்தியநாராயண கவுட் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

வாயில் மதுவை ஊற்றி..

இந்நிலையில், பிரியங்கா ரெட்டி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் வாக்குமூலங்களை போலீஸார் பெற்றுள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ள தகவல்கள் மேலும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன. இதுகுறித்து காவல் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

பிரியங்காவை சுங்கச்சாவடி அருகே உள்ள புதரில் தள்ளிவிட்டு அவரை பலாத்காரம் செய்ய நால்வரும் முயன்றுள்ளனர். அப்போது அவர் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, தங்களிடம் இருந்த மதுபானத்தை பிரியங்காவின் வாயில் ஊற்றி அவரை மயக்கமடைய செய்துள்ளனர். பின்னர், அவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கின்றனர் என அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x