

கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு எதிராக நடைபெறும் அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்றத் தில் முன்னாள் அமைச்சர் செல்வகண பதி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது: நான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்ததால் ஆளுங் கட்சியினர் என் மீது பொய்வழக்கு போட முயற்சிக்கின்றனர். 2013-ம் ஆண்டு மே 15-ம் தேதி கிருஷ்ணகிரி ரவுண்டானா வில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசும்போது, முதல்வர் ஜெயலலி தாவை அவதூறாகப் பேசியதாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டத்தில் முதல்வரின் நிர்வாகம் குறித்து பேசவில்லை. அப்படி இருக்கும்போது குற்றவியல் விசாரணை முறைச்சட்டப்பிரிவு 199 (2)-ன் கீழ் அரசு செலவில் எப்படி அவதூறு வழக்கு தொடர முடியும்.
அதுபோல, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 499 மற்றும் 500 (குற்றவியல் அவதூறு சட்டப்பிரிவுகள்) இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த இச்சட்டப்பிரிவுகள் இதுவரை பயன்படுத்தப்படுகிறது. அதனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை பறிக்கும் வகையில் இச்சட்டப்பிரிவுகள் அமைந்துள்ளன. எனவே, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான இச்சட்டப்பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடக்கும் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதாடினார்.
அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 499, 500 ஆகியவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட சட்டப்பிரிவுகளை எதிர்த்து இந்த நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்கை முடித்து வைக்கிறோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இருதரப்பினரும் கட்டுப்பட வேண்டும். மனுதாரர் மீது, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மனுதாரரின் மனுவுக்கு பொதுத் துறை செயலாளர் உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.