Published : 01 Dec 2019 04:33 PM
Last Updated : 01 Dec 2019 04:33 PM

மிசா கைதும் சிறையும்; நானே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது: ஸ்டாலின் 

மிசாவில் கைது செய்யப்பட்டு நான் சிறையிலே இருந்தேன் என்பதை நானே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

புதுக்கோட்டையில் திமுக எம்எல்ஏ பெரியண்ணன் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுகவின் மூத்த தலைவர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான திருநாவுக்கரசர், தமிழக பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் ஸ்டாலின் பேசியதாவது:

''தனக்கு என்ன லாபம் என்று கணக்குப் போட்டு பார்க்காமல், தன்னால் இயக்கத்துக்கு என்ன லாபம் என்ற உணர்வோடு உழைத்த உத்தமர் அண்ணன் பெரியண்ணன் என்று தலைவர் கலைஞர் அடிக்கடி சொல்வார். ஓராண்டுகாலம் மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தவர் பெரியண்ணன். 500க்கும் மேற்பட்டவர்கள் மிசாவில் கைதானவர்கள் இருக்கிறார்கள். நான் கூட மிசாவில் கைதானது இப்போது சர்ச்சையானது. நான் அப்போதே சொன்னேன், நான் சிறையிலே இருந்தேன் என்பதை நானே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது என்று. மிசா சட்டத்திலே ஓராண்டு காலம் கைதாகி, தலைவர் கலைஞர்தான்; இயக்கம்தான் லட்சியம் என்று உணர்வுபூர்வமாக இருந்த ஆற்றலாளர் அண்ணன் பெரியண்ணன்.

இன்றைக்கு அவர் நம்மிடத்தில் இல்லை என்றாலும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிற உழைப்பு, லட்சியம், பாடம் அனைத்தும் நம்மிடத்தில் இருக்கின்றன. அந்த வழியிலே நின்று இயக்கத்திற்காக லட்சியத்துடன் பாடுபட்டுக் கொண்டிருக்கக் கூடியவர்கள், இந்தக் குடும்பத்தார்!

அவருடைய இல்லத் திருமண விழாவில் பங்கேற்பது என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது; பூரிப்பாக இருக்கிறது. மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கக்கூடிய மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல; அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கும் போதும் தொடர்ந்து அரசியல் பேசி வருகிறார்.

இந்த திருமண நிகழ்ச்சிக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள். எனவே இங்கு அரசியல் பேசத் தேவையில்லை. ஆனால் நான் அரசியல் பேசாவிட்டால் அரசனுக்குக் கோபம் வந்துவிடும். மற்றவர்களுக்கும் அப்படித்தான். எனவே சில விஷயங்களைப் பேச வேண்டியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி நேற்று கூட ஒரு அரசு நிகழ்ச்சியில் பேசும்போது சொல்லியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. புதுவை உள்ளிட்ட 40 இடங்களில் போட்டியிட்டு, 39 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் பொய் சொல்லி நாம் ஓட்டு வாங்கி விட்டோமாம்.

மக்களுக்கு மிட்டாய் கொடுத்து நாம் ஜெயித்து விட்டோமாம். இப்படி திரும்பத் திரும்ப எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது நான் விளக்கம் சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டு மக்களை நீங்கள் கொச்சைப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னேன். சட்டப்பேரவையில் சொன்னேன். சரி நாங்கள்தான் 39 இடங்களில் மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றோம் என்று வைத்துக்கொள்வோம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்பதைப்போல தேனியில் நீங்கள் வெற்றி பெற்றீர்களே, அங்கே மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றீர்களா, அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா என்று கேட்டேன். சரி, இன்றைக்கு இடைத்தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்களே, மக்களை ஏமாற்றி, பொய்யான வாக்குறுதி கொடுத்து, மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றீர்களா? நான் திருப்பிக் கேட்க எவ்வளவு நேரம் ஆகும்! மக்கள் என்ன அவ்வளவு ஏமாளிகளா, அவ்வளவு முட்டாள்களா என்பது தான் நான் கேட்கும் கேள்வி''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x