

2021-ல் ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வை பல்வேறு மாநில மொழிகளில் நடத்த முடிவெடுத்திருக்கும் மத்திய அரசு, வரும் 2020-ம் ஆண்டிலேயே இம்முறையை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழிலும் எழுதலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை ஐஐடியில் நுழைவுத்தேர்வை தாய்மொழியில் எழுதி பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்
நாடு முழுவதும் உள்ள ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் தேர்வில் தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 11 மொழிகளில் தேர்வு எழுதலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் போது மாநிலம் சார்ந்த தாய்மொழிக்கு முதன்மையான இடம் கொடுத்தால் தான் அனைத்து மாநில மாணவ, மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
அதாவது பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வானது ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். இத்தேர்வில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வினாத்தாள் இடம் பெற்றிருந்தது. இதனால் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்தவர்கள் இந்த நுழைவுத்தேர்வு எழுதுவது சுலபமாக இருந்தது. அதே சமயம் தாய்மொழியில் வினாத்தாள் இல்லாமல் இருந்த காரணத்தால் பல்வேறு மாநில மாணவர்கள் ஜே.இ.இ முதன்மைத் தேர்வு எழுத முன்வரவில்லை.
இந்நிலையில் தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வருகின்ற 2021-ம் ஆண்டு முதல் ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் பல்வேறு மாநில மாணவர்கள் அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என்று அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் வங்க மொழி, தமிழ், தெலுங்கு, அஸ்ஸாமி, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, கன்னடா, ஒடியா, உருது ஆகிய 11 மொழிகளில் வினாத்தாள் இடம் பெறக்கூடிய நிலை ஏற்பட்டு பல்வேறு மாநில மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதனால் நாடு முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் மத்தியில் மதிப்புமிக்க பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளதால், தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று பொறியியல் படிப்பில் சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்டு வந்த ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் பல்வேறு மாநில மாணவர்களுக்கு தாய்மொழியில் வினாத்தாள் இல்லை என்ற நிலை மாறி இனிமேல் தாய்மொழியிலும் வினாத்தாள் இடம் பெறக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது. இருப்பினும் 2021-ல் ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வை பல்வேறு மாநில மொழிகளில் நடத்த முடிவெடுத்திருக்கும் மத்திய அரசு வரும் 2020-ம் ஆண்டிலேயே இம்முறையை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
மேலும் மத்திய அரசு உயர்கல்விக்காக நாடு முழுவதும் பொதுவாக நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் அந்தந்த மாநில மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக மாநில மொழியில் வினாத்தாள் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.