

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பெய்த அதிகனமழைக்குப் பிறகு, குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு அதே நாளில் சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், மாநகராட்சி தலைமை நிர்வாகம், அனைத்து நிலை கள அலுவலர்களும் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு நேற்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாநகராட்சி தலைமையகமான, பேரிடர் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வரும் ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள ஜெனரேட்டர்களுக்கு டீசல் நிரப்பும் பணிகளும் நேற்று மேற்கொள்ளப்பட்டன.
கனமழை வாய்ப்பு
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும். சாலைகளில் வெள்ளமெனத் தேங்கி இருக்கும் தண்ணீர், பல ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்விநியோகம் தடைபட்டுள்ளது. தண்ணீர் தேக்கம் காரணமாக கொசு உற்பத்தி பெருகி, அதன் மூலம் டெங்கு பரவுவது அதிகரிக்கக் கூடும்.
வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசும், அரசு அதிகாரிகளும் உடனடியாக இறங்கிட வேண்டும். உடனடி நிவாரணப் பணிகளையும் உடனடியாகத் தொடங்கிட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.