Published : 01 Dec 2019 10:25 AM
Last Updated : 01 Dec 2019 10:25 AM

அதிமுகவுக்கு கமல்ஹாசன் ஒரு பொருட்டல்ல: உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கருத்து

திருவாரூர்

அதிமுகவுக்கு கமல்ஹாசன் ஒரு பொருட்டல்ல என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர், அந்தந்த கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி மன்னார்குடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் பழனிசாமி திறம்பட ஆட்சியை நடத்தி வருவதால், நம்பிக்கை ஏற்பட்டுள்ள பலரும் அதிமுகவில் இணைய தொடங்கி உள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவும், அதிமுகவும் இணைந்து நாடகமாடி வருவதாக கமல்ஹாசன் தெரிவிப்பது வேடிக்கையானது.

தங்களுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக இதுபோன்ற கருத்துகளை கமல்ஹாசன் போன்றவர்கள் தெரிவிக்கின்றனர். இதை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். அதிமுகவுக்கு கமல்ஹாசன் போன்றவர்கள் ஒரு பொருட்டல்ல. அதிமுக யதார்த்தத்தை மக்களிடம் சொல்லி, தேர்தலை எதிர்கொள்கின்ற மக்கள் இயக்கம்.

மேலும், திருவாரூர் மாவட் டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றார்.

விழிப்புணர்வு முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உடலுழைப்பு தொழிலாளர்கள், சுயதொழில் செய்யும் நபர்களுக்கு ஓய்வூதிய விழிப்புணர்வு மற்றும் சிறப்பு பதிவு முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமை உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்து, கட்டுமான தொழிலாளர்களின் விபத்து ஊனம், இயற்கை மரண உதவித்தொகை என ரூ.1.50 லட்சத்துக்கான நிதியுதவி ஆணையையும், தொழிலாளர் பதிவு அட்டையையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ப.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x