

சேலத்தில் அதிமுக பிரமுகர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1.25 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்காவை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் ராயர்பாளை யம் பகுதியில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, லாரிகளில் வந்து இறக்குவதாக எஸ்பி தீபா காணிக்கருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ தலை மையில் தனிப்படை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றபோது, லாரியில் இருந்து தடை செய்யப் பட்ட குட்காவை சிலர் இறக்கிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீஸார் சுற்றி வளைத்தபோது, 2 பேர் சிக்கினர்.
பிடிபட்டவர்கள் ஆத்தூர் விநாய கபுரம் ஜெயந்தாராம் (34), அஜிஜா ராம் (28) என்பதும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என வும் விசாரணையில் தெரியவந்தது. அதிமுக பிரமுகர் குமாரசாமி என்ப வருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து குட்காவை பதுக்கி வைத்து கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங் களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து, போலீஸார் அளித்த தகவலின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். லாரி யில் இருந்து 40 மூட்டை மற்றும் வீட்டில் இருந்த 100 மூட்டை குட்கா வும், வீட்டில் இருந்து 100 அட்டை பெட்டிகளில் குட்கா பவுடர், 5 கிராம் எடைகொண்ட அரை கிலோ வெள்ளி காசு ஆகியவை பிடி பட்டதாக தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1.25 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து, ஜெயந் தாராம், அஜிஜாராமை கைது செய் தனர். 2 பேரை தேடி வருகின்றனர்.
4 பேர் மீது மட்டுமே வழக்கு
ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ கூறும்போது, ‘‘குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அஜிஜாராம், ஜெயந்தாராம் ஆகிய இருவரை கைது செய்துள்ளோம். அங்கிருந்து தப்பிய 2 பேரை தேடி வருகிறோம். குட்கா பதுக்கப்பட்டிருந்த விஷயம் வீட்டு உரிமையாளர் குமாரசாமிக்கு தெரியாது. மளிகை பொருட்கள் வைப்பதற்காக அவரது வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். குமாரசாமிக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என்பதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. வீட்டில் இருந்து 113 மூட்டை ஹான்ஸ், 70 மூட்டை பான்பராக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். இதன் மொத்த மதிப்பு ரூ.27.59 லட்சம்” என்றார்.
விசாரணையில் இருந்து விலகல்
மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவனிடம் கேட்டபோது, ‘‘குட்கா கடத்தி, பதுக்கி விற்பனை செய்தது சம்பந்தமாக நேற்று முன்தினம் இரவு விடிய விடிய நடந்த சோதனையின்போது நாங்கள் உடன் இருந்தோம். நேற்று காலை குட்கா உள்ளிட்ட பொருட்களை மாதிரி எடுக்கவும், மேல் நடவடிக்கை எடுக்கவும் போலீஸார் அனுமதிக்க வில்லை. முதலில் உணவு பாதுகாப்புத் துறை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய உயர் அதிகாரிகள் அறிவுறுத்திய நிலை யில், திடீரென இந்த வழக்கை வீரகனூர் காவல் நிலையமே மேற்கொள்ளும் என்று தெரிவித்து விட்டனர். இதனால், உணவு பாதுகாப்புத் துறை இவ்வழக்கில் சம்பந்தப்படவில்லை’’ என்றார்.