

உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசு தயாராக உள்ளது. ஸ்டாலின் ஏதாவது சாக்கு சொல்லி உள்ளாட்சி தேர்தலை தவிர்த்து விடலாம் என தோல்வி பயத்தில் கூறி வருகிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கயத்தாறில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் வார்டு வரையறை முழுமையாக நிறைவேற்றப்பட்டு, 12,653 ஊராட்சிகள், 520 பேரூராட்சிகள், 124 நகராட்சிகள், 15 மாநகராட்சிகள் என அனைத்து தொகுதிகளிலும் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் வரும் வகையில் தயாரித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மூலம் வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசு தயாராக உள்ளது. ஆனால், ஸ்டாலின் ஏதாவது சாக்கு சொல்லி உள்ளாட்சி தேர்தலை தவிர்த்து விடலாம் என தோல்வி பயத்தில் கூறி வருகிறார்.
சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடக்கும் இளையராஜா பிரச்சினைக்கும், எங்கள் துறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து ஒப்பந்தம் போட்டு, இளையராஜாவுக்கு அறை ஒதுக்கி உள்ளனர். அந்த ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் வெளியேற சொல்லியிருப்பார்கள். இது இயற்கையான நடைமுறை தான். இதுதொடர்பாக இயக்குநர் பாரதிராஜா என்னிடம் கூறினார்.
இளையராஜா ஒரு ஞானி. இசைஞானியாக அவர் தமிழகத்துக்கே பெருமை தேடி தந்தவர். அவருக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பு என்றால் அரசு தலையிடுவதற்கு முகாந்திரம் இல்லை. அந்த துறையின் அமைச்சர் என்ற முறையில் அவருக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன்.
மக்களவை தேர்தலில் இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் அப்படியே தொடரும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூறியுள்ளனர். நடந்த முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் கூட அதே கூட்டணி தான் தொடர்ந்தது” என்றார் அவர்.