

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சிறப்பான வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறது. அதனால் மாநிலம் பசுமையாகவும் செழிப்பாகவும் உள்ளது என மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு அதிமுக சார்பாக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக பொருளாளர் நிலையூர் முருகன் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறுகையில், "தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வழிகாட்டுதலின்படி மிகச் சிறப்பாக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருகிறது.
குறிப்பிடத்தக்க அளவில் இன்றைக்கு தமிழகம் முழுவதும் மழை பெய்து பசுமையான ஒரு சூழ்நிலையை தந்து கொண்டு இருக்கிறது.
ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் திருவிழாவுக்கு ரூ.1000 அள்ளி வழங்கியுள்ள முதல்வர் அதிமுகவின் அரசியல் பயணம் வெற்றி பெறும் என்பதை அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்திருக்கிறது.
தமிழக அரசு மிகப் பெரிய திட்டங்களை அறிவிப்பதைவிட நிறைய நிறைய அரசாணைகளை வெளியிட்டு அவற்றை செயல்படுத்த உரிய நிதி ஒதுக்கீடு செய்து தன்னுடைய வெற்றியை நிலைநாட்டி இருக்கிறது
அதனால், உள்ளாட்சித்துறை தேர்தலைத் தள்ளிப்போடுவதில் அதிமுகவுக்கு எந்த விருப்பமும் இல்லை" என்றார்.