Published : 10 Mar 2014 12:00 AM
Last Updated : 10 Mar 2014 12:00 AM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க குவிந்த மக்கள்: 60 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் ஆயிரக்கணக்கானோர் மனு

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமில் மனு கொடுக்க ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள 60 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பல்லாயிரக்கணக்கானோர் மனு கொடுத்துள்ளனர்.

புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர் கள், முகவரி மாற்றம் செய்ய விரும்புபவர்கள் இந்த முகாமில் விண்ணப் பித்தனர். ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தவர்கள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளனவா என்று சரிபார்த்துக் கொண்டனர். புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6, முகவரி மாற்ற விண்ணப்பிப்பவர்கள் படிவம் 8, வாக்காளர் அட்டையை தொலைத்தவர்கள் படிவம் 1c ஆகியவற்றை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களுக்கான வாக்காளர் அட்டை தயாராக இருந்த இடங்களில் அவை உடனே வழங்கப்பட்டன. சில இடங்களில் முகவரி மற்றும் பெயர்கள் தவறாக இடம்பெற்றிருந்ததால் வாக்காளர் அட்டை வழங்கப்படவில்லை.

சில வாக்குச் சாவடிகளில் முகாம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே வாக்காளர் படிவங்கள் தீர்ந்துவிட்டன. சில இடங்களில் படிவங்கள் நகல் எடுக்கப்பட்டு கொடுக்கப்பட்டன. ஆனால் சில இடங்களில் பொதுமக்கள் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் திங்கள்கிழமை புதிய விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தனர்.

ஆன்லைனில் தகவல்கள் சரியில்லை

ஆன்லைன் மூலம் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்திருந்த பலர் அதில் பல கோளாறுகள் உள்ளதால், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை பார்த்த பிறகே திருப்தி அடைந்தனர்.

அடையாறு பகுதியில் சிறப்பு முகாமுக்கு வந்த மதன் கூறுகையில், “இணையதளத்தில் என் குடும்பத்தினர் பெயர்களுக்கு கீழ் வேறு ஒருவருடைய தகவல்கள் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் இங்குள்ள வாக்காளர் பட்டியலில் எங்களது தகவல்கள் சரியாக இருக்கின்றன” என்றார்.

வாக்காளர் அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம்

வாக்காளர் அட்டைக்காக விண்ணப்பித்து கிடைக்காதவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் புகைப்படத்துடன் மற்ற தகவல்களும் சரியாக இருந்தால், அவர்கள் வாக்களிக்கலாம். பட்டியலில் உள்ள தங்கள் வாக்காளர் எண்ணையும் குறித்து வைத்துக் கொள்வது நல்லது.

முகாமை தவறவிட்டவர்கள்..

சிறப்பு முகாமில் கலந்துகொள்ள முடியாதவர்கள் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் திங்கள் முதல் சனிக் கிழமை வரை விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கலாம். அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வீட்டில் உள்ள வேறோர் நபர் மூலம் மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். இந்த முகாமை தவறவிட்டவர்களுக்கு வரும் 25-ம் தேதி அனைத்து தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் மனு செய்யலாம்.

‘சேலஞ்ச்’ ஓட்டு

சிலருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர்கள், தகவல்கள் சரியாக இருந்தும், அந்த பெயர்களின் மீது “நீக்கப்பட்டது” என்ற முத்திரையிடப்பட்டிருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வீடுகளுக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்த காரணத்தால், அல்லது போதிய தகவல்கள் அதிகாரிகளுக்கு கிடைக்காத காரணத்தால் அவ்வாறு முத்திரையிடப்பட்டிருக்கும். சரியான தகவல்களுடன் வாக்காளர் அட்டை பெற்றிருந்தால் அவர்களும் வாக்களிக் கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அது சேலஞ்ச் ஓட்டு எனப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x