

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று (நவ.30) செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழையும் 8 மாவட்டங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. குறிப்பாக நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் 16 செ.மீ., புதுக்கோட்டையில் 14 செ.மீ., திருவாரூர் மாவட்டம் குளவாசலில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திற்கு வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்"
இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.