

பிரபாகரன் ஈழத் தமிழர்கள் விடுதலைக்காகப் போராடிய மாவீரர் என மாநிலங்களவையில் வைகோ தெரிவித்தார்.
மத்திய, மாநில உறவுகள் குறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த வாரம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒரு தீர்மானத்தின் சுருக்கமான முன்வரையை அறிமுகம் செய்து இருந்தார். இந்நிலையில், நேற்று (நவ.29) அந்தத் தீர்மானம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வைகோ தீர்மானத்தைத் தாக்கல் செய்து உரையாற்றினார். தனது உரையில், அண்ணா மாநில சுயாட்சிக்காக எழுப்பிய குரல், கருணாநிதி 1974 இல் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம், அவர் அமைத்த ராசமன்னார் குழு அளித்த பரிந்துரை, அகாலிதளம் கட்சியின் அனந்தபூர் சாகேப் தீர்மானம், தேசிய மாநாட்டுக் கட்சி, காஷ்மீர் மாநிலத்தில் நிறைவேற்றிய மாநில சுயாட்சி மாநாடு தீர்மானம், கொல்கத்தாவில் இடதுசாரிகள் நிறைவேற்றிய தீர்மானம் உள்ளிட்டவற்றை விளக்கிப் பேசினார்.
மேலும், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான மாநில சுயாட்சி உரிமை குறித்தும் வைகோ பேசினார். இந்திய அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில், பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும், ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வைகோ முன்வைத்தார்.
தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், வைகோ மிகச் சிறந்த பேச்சாளர் என பாராட்டினார்.
இதையடுத்து வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், வைகோ கொண்டு வந்த தீர்மானத்தையும், பல கோணங்களில் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
அப்போது, பாஜகவை சேர்ந்த உறுப்பினர் திரிவேதி, விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பற்றி விமர்சித்தபோது, பிரபாகரன் ஈழத் தமிழர்கள் விடுதலைக்காகப் போராடிய மாவீரர் என்று வைகோ தெரிவித்தார்.
இந்த விவாதம் வரும் டிச.13-ம் தேதியும் தொடரும்.