Published : 30 Nov 2019 11:31 AM
Last Updated : 30 Nov 2019 11:31 AM

தொழில்முனைவோர்களாகும் அரசுப் பள்ளி  மாணவிகள்

ஆடை வடிவைமப்பில் ஈடுபடும் மாணவிகள்.

தொழில்முனைவோர்களாக மாறி வருகின்ற னர் கோவை அரசுப் பள்ளி மாணவிகள். ‘யூடியூப்’ சேனலிலும் பாடம் கற்கின்றனர், மாணவிகள்.கோவை மாவட்டத்தில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் படிக்கும் பள்ளி, ராஜவீதியில் செயல்பட்டு வரும் துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியாகும்.

இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை 2,720 மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழ், ஆங்கில வழியில் மாணவிகளுக்கு பாடம் போதிக்கப்படுகிறது. இதேபோல் விளையாட்டு, கலை, இலக்கியப் போட்டிகளில் திறமை காட்டி வருகின்றனர், இப்பள்ளி மாணவிகள். இதன்தொடர்ச்சியாக தமிழக அரசால் அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட தொழிற்கல்வி படிப்புகள் இப்பள்ளியிலும் தொடங்கப்பட்டு, ஆர்வமுள்ள மாணவிகளை தொழில்முனைவோர்களாக்கி வருகின்றனர், ஆசிரியைகள்.

பள்ளியின் தலைமை ஆசிரியை ஆர்.மணி அரசி கூறியதாவது: இப்பள்ளியில் ஆடை அலங்கார வடிவமைப்பு, பன்முகத்திறமை வளர்த்தல் ஆகிய தொழிற்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பன்முகத்திறமை வளர்ப்பில் பொறியியல், எலெக்ட்ரிக்கல், வேளாண்மை மற்றும் உணவு தயாரிப்பு போன்றவற்றுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உணவு தயாரிப்பில் வீட்டு முறையில் சாக்லெட் தயாரிப்பதற்கும், ஆய்வகத்தில் பொறியியல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.


இயந்திரங்கைளக் கையாள பயிற்சி பெறும் மாணவிகள். படங்கள்: ஜெ.மேனாகரன்.

இதற்கு ஒன்பதாம் வகுப்பில் 80 பேரும், பத்தாம் வகுப்பில் 80 பேரும் என 160 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொழிற்கல்வி ஆசிரியைகள் ஜின்சி மோல், சரண்யா ஆகியோர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். மாணவிகளும் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருகின்றனர். இதற்கு வாரத்துக்கு 6 பாடவேளைகள். இதில் 4 கருத்தியல் வகுப்புகளும், 2 செய்முறை வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. தொடர் பயிற்சி மாணவிகளை தொழில்முனைவோர்களாக உருவாக்கும்.

கூடைப்பந்து, கேரம், கபடி உள்ளிட்ட போட்டிகளில் மாணவிகள் மாவட்ட, மாநில அளவில் சாதித்துள்ளனர். கூடைப்பந்து போட்டியில் மாணவிகள் தேசிய போட்டி வரை சென்று விளையாடியுள்ளனர். மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவிகளுக்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பிரத்யேக ‘யூடியூப்’ சேனல்

இப்பள்ளியில் 4 சீர்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரும்பலகையில் எழுதி ஆசிரியர்கள் பாடம் நடத்திய நிலை மாறி, அதிநவீன தொடுதிரையில் மாணவிகள் பாடம் படித்து வருகின்றனர். இதேபோல இப்பள்ளிக்கென இணையதளத்தில் ‘CCMA GGHS’ என்ற தனி ‘யூடியூப்’ சேனல் தொடங்கப்பட்டு, இப்பள்ளியின் அன்றாட நிகழ்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து பாட ஆசிரியைகளின் வகுப்புகள் உரிய விளக்கங்களுடன் கேமராவில் பதிவு செய்யப்பட்டு, இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இணையத்தைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளவர்கள் சந்தேகம் எழும்போது காணொளி வடிவில் பாடம் படிக்கலாம். இதேபோல பள்ளியிலும் காணொளியின் உதவியுடன் மாணவிகள் பாடம் படிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவிகள் பயன்பெறும் வகையில், அனைத்து பாடங்களும் ஒளிப்பதிவு செய்து, பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இது மாணவிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை இப்பள்ளி மாணவிகள் மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதும் யார் வேண்டுமானாலும் பார்த்து, படித்து பயன்பெறலாம். 2017-18-ம் கல்வியாண்டில் தமிழக அரசின் புதுமைப் பள்ளி விருதை எங்கள் பள்ளி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

- த.சத்தியசீலன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x