

மதுரை-போடி அகல ரயில் பாதை அமைக்கும் பணி பத்து ஆண்டுகளாகியும் நிறைவேறாமல் உள்ளது. மதுரை-போடி இடையே கடந்த 2010-ம் ஆண்டு வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டன. பின்னர் இந்த வழித்தடத்தை அகலப் பாதையாக மாற்றுவதற்காக ரயில் கள் நிறுத்தப்பட்டு மீட்டர் கேஜ் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன.
ஆனால் மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்காததால் பல ஆண்டுகள் பணி நடைபெறாமல் இருந்தது. கடந்த இரண்டு பட் ஜெட்களில் இத்திட்டத்துக்கு தலா ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அகல ரயில் பாதை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.
இத்திட்டத்தில் மொத்தம் உள்ள 90 கிலோ மீட்டர் தூரத்தில் மதுரை-உசிலம்பட்டி மற்றும் உசிலம்பட்டி-போடி என இரு பிரிவுகளாகப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பாதையில் கடைசியாக மீட்டர் கேஜ் ரயில்கள் இயக்கப்பட்டபோது செயல்பட்டு வந்த பல்கலை. நகர், உசிலம்பட்டி, தேனி ஆட்சியர் அலுவலகம், ஆண்டிபட்டி, தேனி, போடி ஆகிய ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்கள் கிராஸிங் செய்வதற்கான வசதி செய்யப்படுகிறது.
மதுரை-போடி அகலப் பாதை திட்டத்தில் முதற்கட்டமாக 37 கிலோ மீட்டர் தூரமுள்ள மதுரை-உசிலம்பட்டி இடையே 90 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே மதுரை-உசிலம்பட்டி இடையே கடந்த மார்ச் மாதம் அகல ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரயில் நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் இதுவரை முடிவடையவில்லை. இப்பணிகள் முழுவதையும் வரும் டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால் இந்த வழியில் ரயில்களை இயக் குவது தொடர்ந்து தாமதமாகிறது. தற்போது தேனி மாவட்டம் தான் தமிழத்திலேயே ரயில்கள் ஓடாத மாவட்டமாக உள்ளது.
இது குறித்து பயணிகள் கூறிய தாவது:
தமிழகத்தில் மதுரை-போடி அகல ரயில் பாதைக்கான பணி தொடங்கிய பிறகு பல்வேறு ரயில் பாதை அமைக்கும் திட்ட ங்கள் தொடங்கி பணிகள் முடி வடைந்து ரயில்கள் இயக் கப்படுகின்றன. ஆனால் 90 கி.மீ. தூரமே உள்ள இத்திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்திட்டத்துக்கு தலா ரூ.100 கோடி வீதம் ரூ.200 கோடி ஒதுக்கியும் பணிகள் முடிக்கப்படாததால் தேனி மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மதுரை- உசிலம்பட்டி இடையே ரயிலை இயக்குவதால் எந்தப் பலனும் இல்லை. இத்திட்டத்தை முழுமையாக முடித்து போடி வரை ரயில் இயக்கினால்தான் பயணிகளுக்கு முழுமையான பலன் கிடைக்கும்.
இத்திட்டப் பணிகளை தென் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் நேரில் ஆய்வு செய்து விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகத்துக்கு அழுத்தம் தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து ரயில்வே அதிகாரி களிடம் கேட்டபோது, டிசம்பரில் பணி முடிந்து, ஜனவரியில் ரயில்களை இயக்கி, ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த கட்டமாக உசிலம்பட்டி- போடி இடையே விரைவில் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- என்.சன்னாசி