Published : 30 Nov 2019 09:40 AM
Last Updated : 30 Nov 2019 09:40 AM

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயல்வதாக திமுக தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்கிறது: செங்கல்பட்டு மாவட்டத் தொடக்க விழாவில் முதல்வர் பழனிசாமி கண்டனம்

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அதிமுக அரசு முயல்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரம் செய்வதாக முதல்வர் பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.

தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது. இந்த மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். அதற்கான தொடக்க விழா செங்கல்பட்டு அருகே வேண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

செங்கல்பட்டு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து தமிழ்நாட்டின் 37வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் உதயமாகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கிறார். அதிமுக அரசு தவறான செய்தியை மக்களிடம் பரப்பி வருகிறது என்ற ஒரு குற்றச்சாட்டைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

‘முதல்வர் திடீரென நேரடித் தேர்தலை ரத்து செய்துவிட்டு வார்டு வாரியாக தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதிமுக அரசு திட்டமிட்டு செயல்பட்டு, தேர்தலை நிறுத்துவதாகத் தெரிகிறது’ என்று ஸ்டாலின் பொய்யான தகவலைத் தெரிவித்திருக்கிறார். ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபொழுது, வார்டு வாரியாகத் தேர்தல் நடத்துவது சிறப்பாக இருக்கும் என்று அவரே சட்டப்பேரவையில் குறிப்பிட்டிருக்கிறார்.

வேண்டுமென்றே, திட்டமிட்டு இந்தத் தேர்தலை தடை செய்வதற்காக, நிறுத்துவதற்காக ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டை சொல்லி வருகிறார். உண்மையிலே, இந்தத் தேர்தலைக் கண்டு அவர்தான் அஞ்சுகிறார். நொண்டிச்சாக்குச் சொல்லிக் கொண்டு திமுக நீதிமன்றத்தை நாடப் பார்க்கிறது.

இந்தத் தேர்தலை நிறுத்துவதற்கு திமுக எடுக்கும் முயற்சிகள் எதுவும் பலிக்காது. பல்வேறு வழக்குகளைப் தொடுத்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் திமுக தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. வேண்டுமென்று திட்டமிட்டு ஏதாவது குழப்பத்தை உருவாக்கி, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட ஸ்டாலின் முயற்சிக்கிறார்.

இலவச கொசுவலை

மழைக்காலங்களில் பெய்கின்ற மழைநீர் ஆங்காங்கே தேங்கி வருவதால் கொசு அதிகமாக உற்பத்தியாகி, மக்களுக்கு மர்மக் காய்ச்சல்கள் வருகிறது. அதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ஏழை மக்களுக்கு இலவச கொசு வலை வழங்கும் திட்டத்தை அதிமுக அரசு விரைவில் நடைமுறைப்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது: மக்கள் நலனை கருத்தில் கொண்டு பெரிய மாவட்டங்களைப் பிரித்து, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரே வருடத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதியைப் பெற்ற ஒரு வரலாற்று சாதனையை தமிழக அரசு செய்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல்கள் கண்டிப்பாக விரைவில் நடைபெறும். தமிழக மக்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x