

தமிழக கடலோரம் மற்றும் மத்திய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது: வங்கக் கடலோரத்தில் நிலவும் காற்று மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் பரவலாக மழை பெய்யும். கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, தேனி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கோவை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும்.
இடி, மின்னல்
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மழை நேரங்களில் இடி, மின்னல் தாக்கம் இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் 120 மி.மீ, அரியலூரில் 110 மி.மீ மழை பதிவானது.
தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் கடல் சீதோஷ்ண சூழல் மோசமாக இருப்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறினார்.
தமிழகத்துக்கு மிக முக்கியமான வடகிழக்கு பருவமழை காலத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பருவமழை தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.