

அரசு போக்குவரத்துத் துறையில் ஓய்வு பெற்ற மற்றும் தற்போதுள்ள தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள ரூ.7 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை குறித்து டிசம்பர் 18-ம் தேதி சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர். ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி போக்குவரத்து தொழிலாளர் களுக்கு ஊதிய முரண்பாடு, ஓய்வுபெற்ற மற்றும் தற் போது பணியாற்றி வரும் தொழி லாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
மேலும், புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து தொழிற்சங்கங்கள் சார் பில் நிர்வாகத்திடம் மனு அளித் தும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வில்லை என்று கூறப்பட்டது. இதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை கள் குறித்து டிசம்பர் 18-ம் தேதி சென்னையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்படவுள்ளது.
4,500 ஒப்பந்த தொழிலாளர்கள்
இதுதொடர்பாக சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் கூறும் போது, ‘‘போக்குவரத்து தொழி லாளர்களுக்கு ஏற்கெனவே போடப் பட்ட ஒப்பந்தத்தின்படி, பல்வேறு சலுகைகள் வழங்கப்படவில்லை. குறிப்பாக, ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.7 ஆயிரம் கோடி நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளது. மேலும், 4,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் இன்னும் நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.
கோரிக்கைகளை வலியுறுத்துவோம்
இதேபோல், புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து நிர்வாகம் இன்னும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதைக் கண்டித்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தியுள்ளோம். இதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த டிசம்பர் 18-ம் தேதிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவோம்’’ என்றார்.